மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 அக் 2017

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்!

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழு கூட்டம் அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்காக நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், "தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழு கூட்டம் வரும் அக்டோபர் 8-ம்தேதி சென்னை அண்ணா சாலையிலுள்ள காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் சங்க உறுப்பினர்களான முன்னணி நடிகர் நடிகைகள் மூத்த நாடக மற்றும் திரைப்பட நடிகர் நடிகைகளும் கலந்து கொள்கிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், "இக்கூட்டத்தில் பொது செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்துவார். துணைத் தலைவர் கருணாஸ் 2016-2017-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்குகளை வாசித்து ஒப்புதல் பெறுவார். பொருளாளர் கார்த்தி எதிர்கால பொருளாதார திட்டமிடல் பற்றிய விளக்க உரை நிகழ்த்த, பொதுச் செயலாளர் விஷால் சங்கத்தின் கடந்த கால செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி விளக்கி கூட்டத்தில் ஒப்புதல் பெறுவார். அதனைத் தொடர்ந்து தலைவர் நாசர் தலைமை உரையாற்றுவார். துணைத் தலைவர் பொன்வண்ணனின் நன்றி உரையுடன் பொதுக்குழு கூட்டம் நிறைவு பெறும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் சங்க உறுப்பினர்கள் அனைவரும், தங்களது உறுப்பினர் அடையாள அட்டையுடன் வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

செவ்வாய், 3 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon