மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

ஆறு கடந்து எட்டு!

 ஆறு கடந்து எட்டு!

தேவராஜ அஷ்டகம்?

ராமானுஜர் பல சிஷ்யர்களுக்கு பல உன்னதமான தத்துவங்களைக் கொடுத்திருக்கிறார். பல சிஷ்யர்களிடம் இருந்து உன்னதமான கருத்துகளை கற்றுக்கொண்டும் இருக்கிறார்.

பிரம்ம சூத்திரத்துக்கு பாஷ்யம் எழுதும்போது கூரத்தாழ்வான் ராமானுஜருக்குப் பெரிதும் உதவி செய்திருக்கிறார். தான் வளர்த்த குழந்தையான பராசர பட்டர் மிகச் சிறந்த அறிவாளியாக அறியப்பட்டபோது...தான் மோத வாய்க்காத மாதவ வேதாந்தி என்ற அத்வைதியிடம் தர்க்க மேடையில் மோத பராசர பட்டரையே அனுப்பினார் ராமானுஜர்.

இவ்வாறு அறிவு எங்கிருக்கிறதோ, ஞானம் எங்கிருக்கிறதோ அதைக் கொண்டாடுவதில் ராமானுஜர் மிகச் சிறந்த சமர்த்தர். அப்படிக் கொண்டாடி அந்த ஞானிகளை வைணவத்துக்கு அழைத்து வந்து அவர்களின் ஞானத்தை வைணவத்துக்குப் பயன்படுத்துவார் ராமானுஜர்.

இதற்கெல்லாம் ஆரம்பமாக அவர் முதன் முதலில் கண்டுவியந்த அறிவு திருக்கச்சி நம்பிகளின் அறிவுதான். திருக்கச்சி நம்பிகளின் வைணவச் சரணாகதியைப் பார்த்து ஈர்க்கப்பட்டார் ராமானுஜர். பொருள் மீதான பற்றைத் துறந்து திருமாலின் அருள் மீதான பற்றுக்காக சேவைசெய்தார் திருக்கச்சி நம்பிகள். வைணவத்தின் மீதான தன் உறுதியான நம்பிக்கையால் காஞ்சி பெருமாளோடே பேசும் ஆற்றலையும் பெற்றார்.

ராமானுஜருக்கு சமூக சிந்தனையை முதலில் ஏற்படுத்தியதும் திருக்கச்சி நம்பிகளே என்றும் கூறலாம். பிராமணர் அல்லாத குடும்பத்தைச் சேர்ந்த திருக்கச்சி நம்பிகள் வைணவத்தில் பிரசித்தி பெற்றது முதன்முறையல்ல. ஆழ்வார்கள் காலத்தில் இருந்தே வைணவம் சாதிகளை கடந்த சரணாகதிக்குத்தான் முக்கியத்துவம் தருகிறது.

எனினும் ராமானுஜர் என்னும் வைணவ மலர் மலர்கின்ற பொழுதில், அந்த மலருக்குத் தேவையான உணர்வுகளை ஊட்டியது திருக்கச்சி நம்பிகள் என்கிற நீர்தான் என்றால் அது மிகையல்ல.

ராமானுஜர் கேட்ட சந்தேகங்களைத் தொகுத்து காஞ்சிப் பெருமாளிடம் கேட்டார் திருக்கச்சி நம்பிகள். அதுதான் ஆறு வார்த்தைகள் என்று வைணவத்தின் உயர்ந்த பீடத்தில் வைத்து உச்சரிக்கப்படுகின்றன. ராமானுஜருக்கு திருக்கச்சி நம்பிகள் மூலமாக திருமால் உரைத்த அந்த ஆறு வார்த்தைகள்தான் வைணவத்தின் அடித்தளமாக இருக்கிறது. ராமானுஜரது வைணவப் பயணத்துக்கு வழி காட்டியவை திருக்கச்சி நம்பிகள் பெருமாளிடம் கேட்டு உரைத்த அந்த ஆறு வார்த்தைகள்தான்.

அந்த ஆறையும் தாண்டி இன்னொரு எட்டு இருக்கிறது. அதுதான் ராமானுஜரின் சந்நியாசத்துக்கும் திசை காட்டியது என்பார்கள்.

அதென்ன எட்டு? அந்த எட்டுதான் தேவராஜ அஷ்டகம்!

காஞ்சி தேவராஜப் பெருமாளைப் போற்றி திருக்கச்சி நம்பிகள் எட்டு வடமொழிப் பாடல்களை இயற்றியிருக்கிறார். அதுதான் தேவராஜ அஷ்டகம்! அஷ்டம் என்றால் எட்டு என்று பொருள்.

ஆலவட்டம் வீசும்போதே, அந்த அஷ்டக மந்திரத்தையும் பெருமாளுக்காக படைத்து அளித்தார் திருக்கச்சி நம்பிகள்.

அந்த அஷ்டகத்தில்தான் முக்கியமான அம்சங்கள் உள்ளன.

முதல் நான்கு மந்திரங்களில் திருமாலைப் போற்றிச் சாற்றுமறை பாடும் திருக்கச்சி நம்பிகள், நான்கு முதல் எட்டு வரையிலான மந்திரங்களில் தனது நிலையைப் பெருமாளிடம் சொல்கிறார்.

’குடும்ப வாழ்க்கை என்பது ஒரு பாலைவனம், அந்த வனத்தில் புலிகள் போன்ற பயங்கரமான வியாதிகள் இருக்கின்றன. பாலைவனத்தில் முட்புதர்கள்போல் அற்பசுகங்கள் நிறைந்திருக்கின்றன. ஆசை என்னும் மரங்கள், மக்கள், மனைவி வீடு நிலம் இவை எல்லாம் கானல் நீர் போல் நிறைந்திருக்கின்றன.

இப்படிப்பட்ட வனத்தில் செய்யவேண்டியவை, செய்யத்தகாதவை என்னும் பகுத்தறிவில்லாத குருடனாகவும் இங்காங்கும் அலைந்து இடைவிடாது பேராசை உடையவனும், மெலிந்து வாடிய அவயவங்களுடன் கூடினவனும், திறமையற்றவனும், உடல் திடம், மன திடம், ஆரோக்கியம் ஆகியவை குறைந்தவனாக இருக்கிறேன். மன சஞ்சலத்துக்கே இருப்பிடம் ஆனவனாக, இப்படி சொல்லத்தகாத பல வகை துக்கங்களால் தாபத்தை அடைந்தவனாக இருக்கிறேன்.

இப்படிப்பட்ட என்னை தேவராஜனே! கருணைக்கடலே! தேவர்களுக்கும் தேவனே! உலகத்துக்கு ஸ்வாமியே! உன் பார்வை என்னும் அமுத ஆற்றின் அலைகளைப் போடுவதால் உண்டான திவலைகளால் கருணை என்னும் காற்றுடன் குளிர்ந்து அருள்பாலிப்பாய். என்னைக் கடைத்தேற்றுவாய். குளிர்ந்த கருணை என்னும் காற்று கொண்டுவந்து உன் பார்வை என்னும் அமுத ஆற்றின் அலை அடிப்பதால் ஏற்பட்ட துளிகளால் நனைப்பாயாக’’ என்று வேண்டுகிறார் திருக்கச்சி நம்பிகள்.

அதாவது குடும்பம், சொத்து, செல்வம், பொருள், ஆசை ஆகியவை எல்லாம் பாலைவனத்திலே வாழ்கிற வாழ்க்கை போன்றவை என்றும்… திருமாலின் பார்வை என்னும் அமுத ஆற்றின் அலைகள் அடிக்கும்போது எழும் ஒரு திவலை நம் மீது பட்டாலே போதும் என்றும் குறிப்பிடுகிறார் திருக்கச்சி நம்பிகள்.

தஞ்சமாம்பாள் என்னும் மனைவி சனாதன தர்மத்தையும், பிராமண்ய கட்டுப்பாடுகளையும் கட்டிக் காப்பாற்றும் வகையில் செயல்பட்டு வந்த நிலையில்… திருக்கச்சி நம்பிகளின் இந்த தேவராஜ அஷ்டகத்தை ராமானுஜர் வாசிக்கிறார். குடும்பம் என்னும் பாலைவனத்தில் இருந்து தப்பித்து, நாராயணனின் அமுத ஆற்றுக்குப் பயணிக்க நினைக்கிறார்.

அதுதான் அவர் மனதில் சந்நியாசம் என்ற விதையைத் தூவுகிறது. ராமானுஜர் சந்நியாசியாக மாறி பின்னாட்களில் யதிகளுக்கெல்லாம் ராஜனான யதிராஜர் ஆக திகழ்ந்தார். அவரது இந்த மாற்றத்துக்கு திருக்கச்சி நம்பிகளின் தேவராஜ அஷ்டகம் ஒரு சிறுபொறியாக, ஊக்கியாக இருந்திருக்கிறது.

ஆழ்வார்கள் ஆய்வு மையம் அமைத்துத் தரும் அற்புதமான மேடைகளில் வைணவம் என்பது ஆன்மிக தத்துவமாக மட்டுமல்லாமல்… வாழ்வியல் கோட்பாட்டாகவும் வழங்கப்படுகிறது. ருசிப்போம், இன்னும்!

ஆழ்வார்கள் ஆய்வு மையம் வளரட்டும்… ராமானுஜர் புகழ் ஓங்கட்டும்!

விளம்பர பகுதி

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon