மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

வாங்க சாப்பிடலாம்... VB Heritage

 வாங்க சாப்பிடலாம்... VB Heritage

சென்னை, மயிலாப்பூர் என்றாலே விசேஷம்தானே! சென்னை மாநகரம் தோன்றுவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மயிலாப்பூர் ஒரு கடலோர நகரமாகப் பெயர் பெற்றிருந்தது. பல்லவர் காலத்தில் இது ஒரு சிறப்புப் பெற்ற துறைமுகமாகவும் விளங்கியது. 16ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் போர்த்துக்கீசியர் ஆதிக்கம் ஏற்பட்டபோது, இவ்விடத்தில் அவர்களுக்கான குடியேற்றம் ஒன்றை நிறுவ விரும்பினார்கள். இதனால், மயிலாப்பூரைக் கடற்கரையிலிருந்து உள் நோக்கி இன்றைய இடத்துக்கு நகர்த்தினார்கள்.

இப்பகுதியில் நீண்டகாலமாகவே இந்து சமயத்தின் சைவம் மற்றும் வைணவப் பிரிவுகள் சிறப்புற்று விளங்கின. பண்டைக்காலக் கரையோர மயிலாப்பூரில் சிவனுக்குப் பெரிய கோயில் ஒன்று இருந்ததற்கான சான்றாக 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று கூறுகிறது. ஆனால், அக்கோயிலை போத்துக்கீசியர் அழித்துவிட்டனர் என்றும் இன்றைய கபாலீஸ்வரர் கோயில் 16ஆம், 17ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டதாகும் என்றும் வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.

மயிலை, கபாலீஸ்வரர் கோயில் மட்டுமல்லாமல்... இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவரான செயின்ட் தோமஸ் கி.பி 72ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள சின்னமலை (Little Mount) அருகே கொல்லப்பட்டார் எனவும் இவரது உடல் மயிலாப்பூருக்கு எடுத்துவரப்பட்டு, இங்கே அடக்கம் செய்யப்பட்டதாகவும் கருதப்படுகின்றது. அவ்விடத்தில் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயமே இன்று சாந்தோம் தேவாலயமாக அமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

அத்துடன்... மயிலாப்பூரில் ராமகிருஷ்ண மடத்தின் கிளை ஒன்றும் அமைந்துள்ளது. வங்காளத்தைத் தவிர மற்ற இடங்களில் ராமகிருஷ்ண இயக்கத்தின் முதல் கிளை இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் திருவள்ளுவர் பிறந்த ஊர், மயிலாப்பூர் என்றும் சொல்கிறார்கள். இதுமட்டுமா... ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், ஆதி கேசவப் பெருமாள் கோயில், மாதவப் பெருமாள் கோயில், முண்டகக்கன்னி அம்மன் கோயில், சாய்பாபா கோயில் என்று பாரம்பர்யமான இடங்களையும், பண்டைய காலம் தொட்டு வாழும் மக்களையும் கொண்டுள்ள நகரமே மயிலாப்பூர்.

இப்படிப்பட்ட விசேஷமான இடத்தில் அமைந்துள்ள உணவகம்தான் VB Heritage.

தெற்கு மாட வீதியில் உள்ள விபி ஹெரிடேஜ் உணவகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மேஜையிலும், நாற்காலியிலும் நமது பாரம்பர்யம் பிரதிபலிக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகளை மீட்டெடுக்கிறது. உள்புற அலங்காரத்திலும் அதே நேர்த்தி.

உள் அலங்காரத்தில் மட்டும்தானா பாரம்பர்யம்? இல்லவே இல்லை.... பரிமாறப்படும் உணவு வகையிலும் பாரம்பர்யத்தைத் திறம்பட நிலைநிறுத்தியிருக்கின்றனர் நம்ம வீடு வசந்த பவனின் விபி ஹெரிடேஜ் உணவகத்தில்.

சொதி இட்லி, சோளப் பணியாரம், எள் பொடி தோசை, நல்லெண்ணெய் தோசை, கோதுமை தோசை, கோதுமை பொங்கல், திணை பொங்கல், கருப்பட்டி பொங்கல், மண்பானை தயிர் சாதம், மண்பானை தயிர் வடை, கொண்டைக்கடலை வடை, இலை அடை, இடியாப்பம் சொதி, உளுந்தங்களி, கோதுமை ரவா தோசை என்று ஹெரிடேஜ் ஸ்பெஷல் மெனு நீண்டு கொண்டே சொல்கிறது. இப்படி பழைமையான உணவுப் பட்டியலுடன் இட்லி, வடை, தோசையிலும் பலவித வகைகள். இவை தவிர வட இந்திய, தென்னிந்திய, தந்தூரி, சைனீஸ் அயிட்டங்களுடன் சாட் வகைகளிலும் மதிய நேரத்தில் சாப்பாட்டுக்கும் தனிக் கவனம் செலுத்துகிறார்கள் விபி ஹெரிடேஜ்ஜில்.

பாமரன் முதல் பண்டிதர்கள் வரை வலம்வரும் மயிலாப்பூரில் அமைந்துள்ள இத்தகைய உணவகத்தில் கூட்டம் அதிகமிருந்தாலும், கூச்சல் இல்லை. காரணம், அங்குள்ள ஊழியர்கள். வருபவர்களை வரவேற்று, அவர்களுக்கான இட வசதியை ஏற்படுத்திக் கொடுத்து, தேவையானவற்றை ஆர்டர் எடுத்து, உடனுக்குடன் பரிமாறி அவர்களை அன்புடன் உபசரிக்கும் விதமே அலாதியானது.

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக உணவகத் தொழிலில் ஈடுபட்டு, தரம் ஒன்றையே தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும், இப்படிப்பட்ட வசந்த பவன் உணவகங்கள் உருவாக மூலக்காரணமாக இருக்கும் திரு. முத்துகிருஷ்ணன் அவர்கள் இந்த புதிய கிளையின் திறப்பு விழாவின்போது கூறியது இங்கே நினைவுகூரத்தக்கது.

``சாதாரண மக்களுக்கும் சத்தான, தரமான உணவுகளைத் தர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தத் தொழிலுக்கே வந்தேன். சாப்பிடுகிறவர்கள் திருப்தியாக, சந்தோஷமாகச் சாப்பிட்டுப் போகணும். பணம் முக்கியமல்ல. சாப்பிட்டுப் போகிறவர்களின் வாழ்த்துகள்தான் முக்கியம்” என்றார். அவர் கூறியது நிஜம் என்பதை நிரூபிக்கும் வகையில் மயிலாப்பூர் விபி ஹெரிடேஜ் உணவகத்தில் சாப்பிட்டு செல்கிறவர்களின் முகத்தில் பிரதிபலிக்கிறது. இந்த வெற்றிக்கான விதை சாதாரணமானதல்ல.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் நாங்குநேரி தாலூகாவைச் சேர்ந்த கிராமம் ஒன்றில் விவசாயம் பார்த்துவந்தவர் முத்துக்கிருஷ்ணன். 1950 வாக்கில் இலங்கைக்குப் போய் அங்கு இருந்த `சரஸ்வதி கஃபே’ என்ற உணவகத்தில் உணவு பரிமாறும் பணி செய்துவந்தார். ஒரு காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இலங்கையில் பிரச்னை தீவிரமாகியது. எனவே தாயகம் திரும்பினார். சென்னையில் உஸ்மான் சாலையில் ’திருநெல்வேலி அல்வா’ என்று முதன்முதலில் பெயரிட்டு அல்வா தயாரித்து விற்பனையைத் தொடங்கினார். அதற்காகவே திருநெல்வேலியில் இருந்து ஆட்களை அழைத்துவந்தார்; தாமிரபரணித் தண்ணீரையும் சேர்த்து வெற்றிகரமாக திருநெல்வேலி அல்வாவைச் சென்னையில் விற்பனைக்குக் கொண்டு வந்தவர். அந்த முயற்சி பின்னடைந்தாலும், அவருடைய அடுத்தகட்ட முயற்சியும் அவருடைய புதல்வர் திரு. ரவி அவர்களின் அயராத உழைப்பும் முற்போக்கு சிந்தனையும் இன்று இப்படிப்பட்ட உயர்தர சைவ உணவகங்களை வெற்றிகரமாக இயக்கக் காரணமாக இருந்திருக்கிறது.

இங்கு வரும் உள்ளூர்காரர்கள் மட்டுமல்லாமல், வெளியூர்களில் இருந்துவரும் விருந்தினர்களும், பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் தங்கள் சொந்த ஊரில் உள்ளது போன்ற பழைமைக்கும் புதுமைக்குமான ஓர் உறவு பாலத்தை, உணவு பாலத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது விபி ஹெரிடேஜ். இது மேலும் தொடர்கிறது.

விளம்பர பகுதி

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon