மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

டிஜிட்டல் திண்ணை: அறிவிக்கப்படாத ஆளுனர் ஆட்சி!

டிஜிட்டல் திண்ணை: அறிவிக்கப்படாத ஆளுனர் ஆட்சி!

மொபைலில் டேட்டா ஆனில் இருந்தது. ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் தயாராக இருந்தது.

“அதிமுக பொதுக்குழுவில் சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுவிட்டது. தினகரன் அறிவிப்புகள் எதுவும் செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்தத் தகவல்கள் எல்லாம் உடனுக்குடன் டெல்லிக்கும் சொல்லப்பட்டிருக்கின்றன. பொதுக்குழு தீர்மானம் வாசிக்கப்பட சில நிமிடங்களிலேயே அதிமுகவின் முக்கியமான நிர்வாகி ஒருவர் டெல்லிக்கு போனில் பேசி இருக்கிறார். ‘அந்தம்மா பதவியை பறிச்சுட்டோம். தினகரன் அறிவிப்புகள் செல்லாது என அறிவிச்சுட்டோம்’ என தகவல் சொல்லி இருக்கிறார். பொதுக்குழு முடிந்த பிறகும் டெல்லிக்கு அதிமுக தரப்பிலிருந்து பேசினார்களாம்.

‘எல்லாமே நல்லபடியா முடிஞ்சுடுச்சு. ஆனாலும், தினகரன் விடாமல் ஆட்சியைக் கவிழ்க்காமல் ஓயமாட்டேன்’னு பேசிட்டு இருக்காரு. நாங்களும் எல்லா வழியிலும் பேசிட்டோம். ஆனாலும் இன்னும் அவர் ஒத்து வர்ர மாதிரி தெரியலை. அவர்கூட இருக்கும் எம்.எல்.ஏக்கள் எல்லோர் கிட்டயும் தொடர்ந்து பேசிட்டுதான் இருக்கோம். அவங்களும் ஒரு முடிவுக்கு இதுவரைக்கும் வரலை. எந்த நிமிஷம் என்ன நடக்கும்னு புரியாமல்தான் நாட்களை நகர்த்திட்டு இருக்கோம். ஜெயந்தி நடராஜன் வீட்டுல ரெய்டு நடக்குது. அவங்க பயந்து போயிருக்காங்க. அதே பயத்தை ஏன் தினகரனுக்கோ. அவங்ககூட இருக்கும் எம்.எல்.ஏக்களுக்கோ காட்டக் கூடாது? இதெல்லாம் நாங்க சொல்லித்தான் நீங்க செய்யணுமா? நீங்க சொல்றதைத்தானே நாங்க கேட்டுட்டு இருக்கோம். தினகரன் அடுத்த கட்டத்தை நோக்கி மூவ் ஆகுறதுக்குள்ள என்ன செய்யலாம்னு பாருங்க...’ என்று சொல்லி இருக்கிறார்கள்.

எதிர்முனையில் பேசியவர்களோ, ‘இதுக்கு எதுக்கு பயப்படுறீங்க? ஆட்சியை யாரும் எதுவும் செய்ய முடியாது. எல்லாவற்றையும் நாங்க கவனிச்சிட்டுதான் இருக்கோம். தினகரனை எப்போ என்ன செய்யணும்னு எங்களுக்கு தெரியும். நீங்க இதுக்கெல்லாம் கவலைப்படாமல் உங்க வேலைகளை பாருங்க...’ என்று சொன்னார்களாம். ‘டெல்லியில் பேசி இருக்கோம். அவங்க எல்லாத்தையும் பார்த்துக்குறோம்னு சொல்லி இருக்காங்க..’ என்று பொதுக்குழுவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியே சில அமைச்சர்களிடம் சொன்னதாகவும் சொல்கிறார்கள்.

ஆனாலும், மத்திய அரசை மட்டுமே எதிர்பார்த்துக் காத்திருப்பதைவிட நாமும் எதாவது செய்யலாம் என களமிறங்கி இருக்கிறது எடப்பாடி டீம். அதன் ஒரு கட்டமாகத்தான் தினகரன் டீமில் உள்ளவர்கள் மீது என்ன வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்ற ஒரு லிஸ்ட் எடுத்திருக்கிறார்கள். அதில் முதலில் சிக்கியவர் பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன். நாமக்கல் மாவட்டத்தில் அவர் மீது ஏற்கெனவே பதியப்பட்ட ஒரு வழக்கை தூசு தட்டினார்கள். இப்போது பழனியப்பனைக் கைதுசெய்யத் தேட ஆரம்பித்துள்ளது காவல் துறை. இதேபோல தினகரன், தினகரன் ஆதரவாளரான நடிகர் செந்தில் மீது அவதூறாகப் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் என்ன மாதிரியான தொல்லைகளைச் சட்ட ரீதியாகக் கொடுக்க முடியும் என தீவிர டிஸ்கஷனில் இருக்கிறது எடப்பாடி டீம்...” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டதுடன் காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.

தொடர்ந்து வாட்ஸ் அப் மெசேஜ் ஒன்றை தட்டிவிட்டது.

“ஆகஸ்ட் 29ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் நான் சொன்ன தகவலின் ஒரு பகுதி இது.... ’மூத்த அமைச்சர் ஒருவர் தனது துறையில் உள்ள செயலாளரை அழைத்திருக்கிறார். ‘இந்த ஃபைல் எல்லாம் அப்படியே பெண்டிங்ல இருக்கு. இதை உடனே க்ளியர் பண்ணுங்க...’ என சொல்லியிருக்கிறார். அதற்கு அந்த செயலர், ‘சார் அதுல எதுவும் சரியாக இல்லை. நம்ம ரூல்ஸ்க்கு உட்பட்டு அதை செய்ய முடியாது’ என சொன்னாராம். அமைச்சரோ, ’இன்னும் எத்தனை நாள் இந்த ஆட்சி இருக்கும்னு தெரியலை. அது சரியில்லை.. இது சரியில்லைன்னு எல்லாத்தையும் நிறுத்தி வெச்சுட்டு இருப்பீங்களா? இருக்கிறதுக்குள்ள எல்லாத்தையும் முடிக்கணும். சீக்கிரம் முடிச்சு அனுப்புங்க..’ என சத்தம் போட்டிருக்கிறார். எதுவும் பேசாமல் அந்த துறையின் செயலர் வெளியே வந்து விட்டாராம். வெளியில் வந்தவர், தலைமை செயலாளரை சந்தித்து இருக்கிறார்.

‘அமைச்சர் கூப்பிட்டாருன்னு போனேன். இதை செய்யுங்க.. அதை செய்யுங்கன்னு சொல்றாரு. அவரு சொல்றதை எல்லாம் செஞ்சா ஒருநாள் எல்லோரும் உள்ளே போக வேண்டியதுதான். என்னால செய்ய முடியாது. நீங்க சொல்லிடுங்க..’ என ஓப்பனாகவே பேசிவிட்டாராம். இந்த தகவல் தெரிந்ததும் மற்ற துறைகளின் செயலாளர்கள் சிலரும் தலைமைச் செயலாளரை சந்தித்தார்களாம். எல்லோரிடமும் இதே மாதிரியான புகார்கள் வந்திருக்கிறது. ‘சட்ட திட்டத்துக்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதை மட்டும் செய்யுங்க. அதைத்தாண்டி எதுவும் செய்ய வேண்டாம். அமைச்சர்களிடம் முடியாதுன்னு சொல்லிட்டு இருக்காதீங்க... பார்க்கிறோம்னு சொல்லிட்டு வந்துடுங்க.. அப்படியே இழுத்துட்டு இருங்க... பார்த்துக்கலாம்!’ எனத் தலைமைச் செயலாளர் சொன்னாராம்.’ - அதைத் தொடர்ந்து நடந்த விஷயத்தை இப்போது சொல்கிறேன்.

அமைச்சர்கள் பலருமே இப்படி டிரான்ஸ்பர் தொடங்கி பல ஃபைல்களை அதிகாரிகளை நோக்கி நகர்த்த ஆரம்பித்தனர். ஆனால், அதிகாரிகளோ எந்த ஃபைலையும் மூவ் செய்யவில்லை. சில தினங்களுக்கு முன்பு தலைமைச் செயலாளரை சந்தித்த மூத்த அமைச்சர் ஒருவர், ‘எதைச் சொன்னாலும் அதிகாரிங்க செஞ்சு கொடுக்க மாட்டேங்குறாங்க... என்னன்னு கேளுங்க...’ என புகார் வாசித்திருக்கிறார். அதற்கு தலைமைச் செயலாளரோ, ‘எதுவாக இருந்தாலும் கவர்னரை ஒருவார்த்தை சொல்லச் சொல்லுங்க. அவரைக் கேட்காமல் எதுவும் செய்ய வேண்டாம்னு சொல்லி இருக்காரு...’ என்று சொல்ல...அமைச்சர் அமைதியாகிவிட்டாராம். எல்லா கன்ட்ரோலும் ஆளுனர் கைக்குப் போய்விட்டது என்பதைத்தானே இது காட்டுது என்று அதிகாரிகள் சொல்ல ஆரம்பித்துள்ளனர்” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

புதன், 13 செப் 2017

அடுத்ததுchevronRight icon