மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

போலீஸ் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்: தினகரன்

போலீஸ் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்: தினகரன்

காவல் துறை மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம், எங்கள் எம்.எல்.ஏ.க்களைப் பாதுகாக்க நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம் என்று அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவில், அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, தினகரன் எடப்பாடி பழனிசாமியை கட்சியிலிருந்து நீக்கி அறிவித்தார்.

இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 13) சென்னை அடையாறில் தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கர்நாடகாவில் தங்கியிருக்கும் எங்கள் எம்.எல்.ஏ.க்களைக் காவல் துறையை அனுப்பி மிரட்டுகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தர வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இல்லையென்றால், உங்கள் மீது வழக்கு போடுவோம் என்றெல்லாம் மிரட்டுவதாக எம்.எல்.ஏ.க்கள் என்னிடம் கூறினார்கள். இதை அவர்கள் ஊடகங்களில் பேட்டியும் கொடுத்திருக்கிறார்கள்.

இன்றைக்கு தமிழகத்தில் ஆட்சி செய்துகொண்டிருக்கின்ற துரோக ஆட்சி காவல் துறையை அனுப்பி எம்.எல்.ஏ.க்கள் மீது பொய் வழக்கு போட்டுவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறது. இதை அவர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் செய்ய உள்ளார்கள். அது மட்டுமில்லாமல், நாங்கள் நீதிமன்றத்தை நாடி காவல்துறை மீதும் அதற்கு அமைச்சராக இருக்கிற முதல்வர் மீதும் நடவடிக்கை இருக்கிறோம்" என்று கூறினார்.

தன் மீது திருச்சி சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்திருப்பது குறித்து தினகரன் கூறுகையில், "என் மீதும் அதிமுக அம்மா அணியின் அமைப்புச் செயலாளர் நடிகர் செந்தில் மீதும் எம்.பி. ப.குமார் அளித்த புகாரின் பேரில் திருச்சி சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். இப்படியான நடவடிக்கை மூலம் தரம் தாழ்ந்து தரம் கெட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள். இந்தச் சூழலில் ஊடகங்கள் பத்திரிகைகள் உண்மைச் செய்தியை வெளியிட வேண்டும்.

இன்றைக்குக்கூட, பழனியப்பன் எம்.எல்.ஏ. மீது யாரோ கொடுத்த புகாரின் பேரில் நாமக்கல் சிபிசிஐடி போலீஸார் அவரை ஏற்கெனவே இரண்டு முறை விசாரனைக்கு அழைத்திருந்தனர். மீண்டும் அவரை விசாரணைக்கு அழைத்தபோது அவர் வேறு வேலையில் இருப்பதால் பிறகு வருகிறேன் என்று கூறியுள்ளார். அப்போது இதை ஏற்றுக்கொண்ட போலீஸார், இன்று பழனியப்பன் விசாரணை சம்மனுக்கு வரவில்லை என்று கூறி அவரைக் கைது செய்வதற்கு அலைந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கு முன்பாகவே, ஊடகங்கள் பழனியப்பனை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளார்கள் என்று செய்தி வெளியிடுகின்றன. பழனியப்பன் சிபிசிஐடி போலீஸாரின் நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஊடகங்கள் வருகின்ற செய்தியை அப்படியே வெளியிடாமல் எங்களிடம் விசாரித்துவிட்டு செய்தியை உறுதிசெய்துகொண்டு வெளியிடுங்கள். ஊடகங்கள் நடுநிலையாக செய்தி வெளியிடுவதுதான் அனைவருக்கும் நல்லது. உங்களுடைய சகோதரர், சகோதரி என்றால் இப்படி விசாரிக்காமல் செய்தி வெளியிடுவீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

கர்நாடகாவில் எம்.எல்.ஏ.க்கள் மிரட்டி தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று எதிர்த் தரப்பிலிருந்து கூறப்படுகிறதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தினகரன், "எம்.எல்.ஏ.க்கள் எங்களை யாரும் மிரட்டவில்லை. நாங்களாகத்தான் வந்து தங்கியிருக்கிறோம்.எங்களுக்கு ஆளுநர் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்ககாத்தான் வந்திருக்கிறோம் என்று ஊடகங்களிடம் கூறியிருக்கிறார்கள்.

எங்கள் அணியிலிருந்து வெளியேறிய கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன்கூட என்னை யாரும் மிரட்டவில்லை. நானாகத்தான் அங்கு தங்கியிருந்தேன். இப்போதும் நானாகத்தான் வந்தேன் என்று கூறியுள்ளார். எனவே, இது போன்ற அரசாங்கத்தின் அத்து மீறல்களை நாங்கள் 30 ஆண்டுகளாகப் பார்த்துக்கொண்டு வருகிறோம். இதுபோல அதிகாரத் திமிரிலே மிரட்டியவர்கள் எல்லாம் இன்றைக்கு இருக்கிற இடம் தெரியாமல் போயிருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமிக்கு 117 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால், எப்படியாவது அறுதிப் பெரும்பான்மையை அடைந்துவிட வேண்டும் என்பதற்காக அவர் எம்.எல்.ஏ.க்களிடம் கெஞ்சிக் கூத்தாடிக்கொண்டிருக்கிறார். அது முடியாதபோது, காவல் துறையை அனுப்பி மிரட்டிப்பார்க்கிறார். இது குறித்து நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். கர்நாடகாவில் இருந்து அங்குள்ள செந்தில் பாலாஜியுடன் பேசினேன். மற்ற எம்.எல்.ஏ.க்களும் என்னிடம் பேசியுள்ளார்கள். நாங்கள் ஆலோசித்து நிதானமாக முடிவெடுத்து நடவடிக்கை எடுப்போம்” என்று கூறினார்.

கர்நாடகா மாநிலத்தில் மைசூரு குடகு மலையில் தங்கியிருக்கிற அதிமுக எம்.எல்.ஏ.க்களில் உங்களுக்கு ஆதரவாக எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற செய்தியாளர்களின் கேள்வியால் கோபமடைந்த தினகரன், "எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியாதா, எம்.எல்.ஏ.க்களை மிரட்டுகிறார்கள் என்று சொல்கிறேன். நீங்கள் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்று கேட்கிறீர்கள். நீங்கள் என்னைக் கோபப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கேள்வி கேட்கிறீர்களா, நான் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் யார் யார் உள்ளனர் என்பதைக் கூற மாட்டேன். நீங்கள் பிரச்னையை திசை திருப்பாதீர்கள்.” என்று கோபமாகக் கூறினார்.

நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்த தினகரன், “எடப்பாடி பழனிசாமி கூட்டியது பொதுக்குழுவே இல்லை. கட்சியைப் பற்றி நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இந்தப் பொதுக்குழு கூட்டம் செல்லுமா என்பது தெரியவில்லை. பொதுக்குழுவில் கலந்துகொண்டவர்கள் பொதுக்குழு உறுப்பினர்களும் இல்லை. அதைப் பொதுக்கூட்டம் என்று வேண்டுமானல் சொல்லலாம்” என்று கூறினார்.

எடப்பாடி பழனிசாமியை எதிர்ப்பது திமுகவுக்கு சாதகமாகிவிடாதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த தினகரன், "எங்கள் பக்கம் 21 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எடப்பாடி பழனிசாமிக்கு மெஜாரிட்டி இல்லை. எடப்பாடியை எதிர்ப்பது என்பது திமுக ஆதரவு ஆகிவிடாது. ஆளுநர் 14ஆம் தேதி வரை காத்திருக்கச் சொல்லியிருக்கிறார். இன்னும் 2 நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம். நாங்கள் கட்சியைக் காப்பாற்ற என்ன செய்யலாம் என்பதை சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுத்த பின்னரே எதையும் சொல்ல முடியும்” என்று கூறினார்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon