மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

ஆட்சியை அகற்றாமல் விட மாட்டோம்!

ஆட்சியை அகற்றாமல் விட மாட்டோம்!

இனி எத்தனை தடைகள் வந்தாலும் அதிமுக ஆட்சியை அகற்றாமல் விடமாட்டோம் என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக வேலூரில் இன்று (செப்டம்பர் 13) போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பேசியதாவது: “பிளஸ்-2 மாணவர்கள் தற்போது 1,190 மதிப்பெண்கள் எடுத்தாலும் ‘நீட்’ நுழைவுத் தேர்வால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை.

நீட் தேர்வில் படித்த பாடங்களில் இருந்து கேள்வி கேட்கப்படுவதில்லை. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விளக்கு அளிக்ககோரி சட்டமன்றத்தில் திமுக கோரிக்கை விடுத்தும் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக பாஜகவும், அதிமுகவும் கூறுகிறது.

ஆனால் அப்போது கூட்டணியில் இருந்த திமுக நீட் தேர்வைக் குப்பையில் போடு என்று கூறியது. இதையடுத்து நீட் தேர்வும் குப்பைக்குப் போனது. மோடி அரசு தூசி தட்டி நீட் தேர்வை எடுத்து வந்துள்ளது. அதிமுக அதனை வரவேற்றுள்ளது. சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராகக் கொண்டுவந்த தீர்மானம் ஜனாதிபதி மாளிகைக்குப் போய்ச் சேரவில்லை.

டெல்லியில் உள்ள யாரோ ஒரு அதிகாரியிடம் அந்தத் தீர்மான நகல் உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிப் போராட்டம் நடைபெறும் வேளையில் 412 இடங்களில் நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டரை அதிமுக அமைத்துள்ளது. செயல் திறன் இல்லாத ஆட்சியாக அதிமுக அரசு உள்ளது. கொள்ளைக் கூட்டம் ஒன்று சட்டமன்றத்தில் புகுந்துள்ளது. நாங்கள் ஒரு பிரச்சினையில் கேள்வி எழுப்பினால் அதுபற்றி அவர்களுக்குப் புரியவே இல்லை.

தமிழகத்தில் சிலைகளை அகற்றும் ஆட்சியை அதிமுக நடத்திவருகிறது. நடிகர் சிவாஜிகணேசன் சிலையை அகற்றியதைத் தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலையையும் அகற்றியுள்ளனர்.

சி.பா.ஆதித்தனார் லண்டனுக்குச் சென்று வக்கீலுக்குப் படித்தவர். அவர் தமிழகத்திற்கு வந்து வக்கீல் தொழிலை விட்டு நாம் தமிழர் இயக்கத்தைத் தொடங்கி தமிழர்களுக்காகப் பாடுபட்டவர். தினத்தந்தி நாளிதழைத் தொடங்கி தமிழர்களைத் தட்டி எழுப்பியவர். அவருடைய சிலையை அகற்றியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. இனி எத்தனைத் தடைகள் வந்தாலும் அதிமுக ஆட்சியை அகற்றாமல் விடமாட்டோம். சட்டமன்றத்தைக் கூட்டினால் 12 மணி நேரத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து ஆட்சியைக் கவிழ்ப்போம்” என்று அவர் தெரிவித்தார்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon