மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

பெஃப்சி போராட்டம் வாபஸ்!

பெஃப்சி போராட்டம் வாபஸ்!

கடந்த மூன்று மாதகாலத்துக்கும் மேலாகத் தமிழ் திரையுலகில் நீடித்துவந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், பெஃப்சி அமைப்புக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் போக்கால் செப்டெம்பர் 1ஆம் தேதி முதல் 12 நாட்களாக பெஃப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இன்று (செப்டம்பர் 13) அதிகாலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (பெஃப்சி ) இடையில் சுமூகமான உடன்பாடு எட்டப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

பிரச்சனைகள் பேசித் தீர்க்கப்பட்டதால் கடந்த 12 நாட்களாக நடந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு இன்று முதல் திரைப்படப் பணிகள் துவங்கியுள்ளன. படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் நடைபெறாமல் முடங்கி இருந்த ரஜினி நடிக்கும் காலா, விஜய் நடிக்கும் மெர்சல், சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் உட்பட பதினொன்று படங்களின் பணிகளும் துவங்கின.

பெஃப்சி தொழிலாளர்களை மட்டுமே வைத்துப் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று அவசியம் இல்லை, தயாரிப்பாளர்கள் விரும்பும் யாரை வைத்து வேண்டுமானாலும் படப்பிடிப்பு நடத்திக்கொள்ளலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. இதை எதிர்த்து பெஃப்சி வேலைநிறுத்தம் அறிவித்தது. தற்போது இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்து பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது: "தயாரிப்பாளர்கள் சங்கமும், பெஃப்சியும் இனிவரும் காலங்களில் இணைந்து செயல்படும் என்பதே முதல் ஒப்பந்தமாகும். மூன்று மாதகாலமாக நடந்த பிரச்சனைக்கு முக்கியக் காரணமாக இருந்த பெஃப்சி தொழிலாளர்களின் பயணப் படி மற்றும் ஊதிய பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. தயாரிப்பாளர்கள் மற்றும் பெஃப்சிக்கான பொது விதிமுறைகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன" என்று கூறினார்.

“படப்பிடிப்புக்காக வெளியூர் பயணம் செய்யும் பெஃப்சி தொழிலாளர்கள், பயணப் படி அல்லாமல் அதற்காக ஊதியம் கேட்பதாகக் கூறி அதற்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுவே கடந்த மூன்று மாதகாலமாக நடந்த பிரச்சனைக்கு முக்கியக் காரணமாக இருந்தது. இந்நிலையில், வெளியூரில் நடைபெறும் படப்பிடிப்புக்கு பெஃப்சி தொழிலாளர்கள் பயணம் செய்யும்போது படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்யும்போது வழங்கப்படும் ஊதியத்தில் ஐம்பது சதவிகிதத்தை ஊதியமாக வழங்க தயாரிப்பாளர்கள் சங்கம் முன்வந்துள்ளது.

“நான்கு கோடி ரூபாய்க்கும் குறைவான முதலீட்டில் எடுக்கப்படும் சிறு படங்களின் தயாரிப்பாளர்கள் தங்களுக்குத் தேவையான தொழிலாளர்களை, பெஃப்சியில் அங்கம் வகிக்கும் யூனியனைச் சார்ந்தவர்களை மட்டும் வேலைக்கு வைத்துக்கொள்ளலாம். பெஃப்சியின் அனைத்து யூனியனைச் சார்ந்தவர்களையும் வேலைக்கு அமர்த்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மேலும் 16 மணி நேரம் வேலைசெய்யும்போது இரட்டை ஊதியம் வழங்க வேண்டும் என்பது நடைமுறையில் இருந்தது, ஆனால் இனி வரும் காலங்களில் ஒன்றரை ஊதியம் வழங்கினால் போதும். இதே போன்று ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் படப்பிடிப்பில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இரட்டை ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. அதிலும் தற்போது ஊதிய தளர்வு செய்துகொள்ளப்பட்டுள்ளது” என்று ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் சுமூக உடன்பாடு எட்டப்பட்டாலும் பெஃப்சியில் இருந்து நீக்கப்பட்ட டெக்னீஷியன் யூனியன் மீண்டும் இணைக்கப்படவில்லை. பெஃப்சியின் சட்ட திட்டங்களுக்கும் டெக்னீஷியன் யூனியனின் கோரிக்கைகளுக்கும் முரண் நிலவுகிறது. எனவே டெக்னீஷியன்கள் தங்களுடைய தேவை குறித்து அவர்களே சுதந்திரமாக முடிவெடுத்துக்கொள்ளவும், அவர்களுடனான உறவை நட்புரீதியில் தொடரவே இந்த முடிவினை எடுத்துள்ளதாக ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon