மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

சமையல் பாத்திரத்துடன் களமிறங்கிய ஜாக்டோ ஜியோ!

சமையல் பாத்திரத்துடன் களமிறங்கிய ஜாக்டோ ஜியோ!

ராமநாதபுரத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு சமையல் பாத்திரங்களுடன் குடியேறி சமைத்துச் சாப்பிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு ஆசிரியர், அரசு ஊழியர் பணியாளர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ–ஜியோ, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தித் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. ஆசிரியர்கள், ஊழியர்கள் என யாருக்கும் விடுப்பு அளிக்கக் கூடாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஊழியர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுப்பதற்கான விளக்க நோட்டீஸ் (17பி) அனுப்ப வேண்டும் என்று சம்மந்தப்பட்ட துறைக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அரசு எந்த நோட்டீஸ் அனுப்பினாலும் பயமில்லை என்று கூறித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுர ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் சமையல் பாத்திரங்களை எடுத்துச் சென்று ஆட்சியர் அலுவலகம் முன்பு சமைத்துச் சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூரில் ஜாக்டோ - ஜியோ உயர் மட்டக் குழு உறுப்பினர் தாஸ் தலைமையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். விழுப்புரத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பும், புதிய பேருந்து நிலையம் முன்பும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலத்திலும் 1000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணி, மாயவன் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் உட்பட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இவர்களுடன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் பணிக்கு செல்லாமல் இன்று 2ஆவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்று காஞ்சிபுரம் கடலூர், கரூர், ஈரோடு ஆகிய இடங்களிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் வரும் செப்டம்பர் 15 அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon