மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

பாம்பன் பாலம்: நூறாவது விபத்துக்கு கேக் வெட்டிய மக்கள்!

பாம்பன் பாலம்: நூறாவது விபத்துக்கு கேக் வெட்டிய மக்கள்!

பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட நூறாவது விபத்தை மத்திய மாநில அரசுகளுக்குத் தெரியப்படுத்தும் வகையில் அப்பகுதி மக்கள் கேக் வெட்டி எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபத்தையும் கடலுக்குள் அமைந்து இருக்கும் பாம்பன் தீவையும் இணைக்கும் வகையில் 2.5 கிமீ தொலைவில் 1988ஆம் ஆண்டு பாம்பன் பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலம் சேதமடைந்ததால் அதனைப் பராமரிக்கும் வகையில் கடந்த ஜூன் மாதம் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் ரூ.2 .6 கோடி செலவில் ரப்பர் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் இரண்டு மாதங்களே ஆன நிலையில் இந்தச் சாலையும் சேதமடைந்துள்ளது.

சுண்ணாம்பு தார், குவாரி துகள்கள் மூலம் போடப்பட்ட இந்தச் சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவது வழக்கமாகிவிட்டது. ராமேஸ்வரம் வரும் சுற்றுலா வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் இந்த விபத்தில் சிக்கியுள்ளன. இந்தச் சாலையில் 30 கி.மீ வேகத்திற்கு அதிகமாகச் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடும் உள்ளது.

இந்த ரப்பர் சாலையால் பாம்பன் பாலத்தில் இன்று (செப்,13) 100ஆவது விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சாலையை சரிப்படுத்த வலியுறுத்தும் வகையில் 100ஆவது விபத்தை கேக் வெட்டிக் கொண்டாடி நூதன முறையில் அப்பகுதி மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சேதமடைந்த பாலத்தைச் சீரமைத்து இனி விபத்துகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon