மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

முதல் குற்றவாளி மத்திய அரசு!

முதல் குற்றவாளி மத்திய அரசு!

“நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த அனிதா மரணத்தின் முதல் குற்றவாளி, மத்திய அரசு. இரண்டாவது குற்றவாளி, தமிழக அரசு” என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தியும் அரியலூர் மாணவி அனிதா மரணத்துக்குக் காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பாக பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் பங்கேற்றன. இதில், நீட் தேர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்பாட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டார். ஆர்பாட்டத்திற்குப் பின், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: ’’நீட் தேர்வை ரத்துசெய்வது தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த உறுதிமொழியின் அடிப்படையில், தமிழக அதிகாரிகள் டெல்லியில் முகாமிட்டிருந்தனர். ஆனால், நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை.

மத்திய அரசு அளித்த தவறான தகவலின் காரணமாகவே, மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்துக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம். இந்தச் சம்பவத்துக்குக் காரணமான பாரதிய ஜனதா அரசு முதல் குற்றவாளி. நீட் தேர்விலிருந்து விலக்கு வாங்க வழியில்லாத மாநில அரசு, இரண்டாவது குற்றவாளி. நாதியற்ற அரசாகத் தமிழகத்தில் தற்போதைய ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடைபெற்றுவருகிறது. நீட் தேர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள். இப்படிப் பல்வேறு போராட்டங்கள் நடந்துவரும் சூழலில், போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். நேற்றைய அ.தி.மு.க பொதுக்குழுவில், மக்கள் நலன் சார்ந்த தீர்மானங்கள் எதுவும் இடம்பெறவில்லை. மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க வழியில்லாத திராணியற்ற அரசாக எடப்பாடி அரசு செயல்படுகிறது. நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் வரை எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடரும்’’ என்றார்.

இந்த ஆர்பாட்டத்தில், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர்கள் டி.பி.எம். மைதீன்கான், பூங்கோதை, ஏ.எல்.எஸ்.லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலைராஜா, அப்பாவு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon