மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

பிக் பாஸ்: உங்கள் பார்வையில் நான் 30!

பிக் பாஸ்:  உங்கள் பார்வையில் நான் 30!

ரெடி….. ஜூட்…. சுஜா……!

நாட்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்றன. ஆகையால் போட்டியும் போட்டியாளர்களும் கடுமையாகிக்கொண்டிருக்கிறார்கள். வெளியேறும்போது கண்ணீர் வடித்த சுஜா, அவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளே நுழையும்போது இறுமாப்போடு இருந்தது ரசிக்கும் விதத்தில் இல்லை. முகமெல்லாம் சிரிப்பும் ஆச்சரியமுமாகப் போட்டியாளர்கள் சுஜாவை எதிர்நோக்க, சுஜாவோ இறுகிய பாறைபோல் இருந்தார். இந்த விஷயத்தில் ஜூலி, சுஜாவைவிட ஆயிரம் மடங்கு சிறப்பு.

ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றிப் பேச்சு எழுவது இயல்பு (அது கூடாத விஷயம் என்றபோதிலும்). அதுவும் ஒருவர் அதிரடியாக வெளியேற்றப்படும்போது அவரைப் பற்றிக் குடும்ப உறுப்பினர்கள் எப்படிப் பேசாமல் இருக்க முடியும்? சினேகன் வெகு இயல்பாகப் பலரை ‘லூசு‘ என்று சொல்வது வழக்கம். அந்த விதத்தில்தான் ‘லூசுப் பொண்ணு’ என்று சுஜாவைக் குறிப்பிட்டார். அதைப் பிடித்துக்கொண்டு தொங்கத் தொடங்கிவிட்டார் சுஜா.

அதே போல் ஆரவ் தன்னுடைய கணிப்பைக் கூறினார். ஆரவ் கணிப்பே என் கணிப்பும். சுஜா வெளியேற்றப்படப் பல வாய்ப்புகள் இருந்தன. ஆனால் ஆரவ் கணிப்பைத் தவறு என்று சுஜாவினால் எப்படிச் சொல்ல முடியும் என்று தெரியவில்லை. இந்த இரண்டு காரணங்களுக்காக சுஜா சினேகனையும், ஆரவ்வையும் எவிக்ஷனுக்கு நாமினேட் செய்தார்.

ஜூலியைப் பற்றி மொத்தக் குடும்பமே மோசமாக விமர்சனம் செய்தது. அதைக் குறும்படமாகப் பார்த்துவிட்டு உள்ளே வந்தார் ஜூலி. அவர் தன் மன வருத்தத்தை வெளிப்படுத்தினார். இதே சினேகனைக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தார். ஆனால் ஒருபோதும் ஜூலி யார் மீதும் சுஜாவைப் போல் வெறுப்பைக் கக்கவில்லை. ஜூலி ஒரு ரகம் என்றால் சுஜா இன்னொரு ரகம் போலிருக்கிறது. ஆசை இருக்கிறது கலெக்டராக…. யோகம் இருக்கிறது மாடு மேய்க்க… என்றொரு சொல் வழக்கு கிராமங்களில் உண்டு. அதே போல் மக்கள் மனங்களை ஓவியாவைப் போல் கொள்ளையடிக்க வேண்டும் என்ற ஆசை சுஜாவிற்கு இருக்கிறது. ஆனால் அவருடைய செயல்பாடுகள் மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்கும் விதமாக இருப்பதுதான் பரிதாபம்!

கமல்ஹாசனின் கட்டளையையும் மீறி வழியனுப்ப ஆயத்தமானார் ஜூலி. ஆனால் அவரை அலட்சியமாகப் புறந்தள்ளினார் சுஜா... தன்னையறியாமலே அடிக்கடி சுஜா ஓவியாவைப் போல் உருமாறிவிடுகிறார். சுட்டிக்காட்டினால் கடுங்கோபம் கொள்கிறார். கண்ணீர் வடித்துப் பல கதைகள் சொல்கிறார். ஓவியா வெளியேறிய அன்று மற்றவர்களின் அன்பைப் புறக்கணித்தது வேறொரு சூழலில். அவர் இருந்த மனநிலையில் அப்படி நடந்துகொண்டதுதான் சரி. ஆனால் இந்த சுஜாவிற்கு என்ன கேடு? அவர் ஏன் ஜூலியைப் புறக்கணித்தார் என்று தெரியவில்லை. வெளியேறும்போதும் புறக்கணிப்பு.. உள்ளே வரும்போதும் புறக்கணிப்பு. ஆக, இந்த வாரம் சுஜாவை மக்கள் புறக்கணிக்க ஆயத்தமாகிவிட்டார்கள். ரெடி….. ஜூட்…. சுஜா……!

டாஸ்க் என்ற பெயரில் சாணியைக் கரைத்து வைத்திருந்தார் பிக் பாஸ். அதற்குள் என்னென்ன கருமமெல்லாம் இருந்தன என்று தெரியவில்லை. அதற்குள் மூன்று பேர் கையை விட்டு மூன்று வாஷர்களை எடுக்க வேண்டுமாம் (நல்லவேளை பிக் பாஸ் இத்தோடு நிறுத்திக்கொண்டார்). ஆரவ் எடுக்க முயன்றபோது அவர் இரண்டு மூன்று முறை வாந்தியெடுக்க முற்பட்டார். ஐயோ பாவம். இறுதியில் எப்படியோ எடுத்துவிட்டார். ஆனால் ஹரீஷ் இரண்டு கைகளையும் விட்டு சும்மா கலக்கு கலக்கு என்று கலக்கிவிட்டார். அடுத்தது சுஜா. ஏதோ மல்யுத்தத்திற்கு ஆயத்தமானதுபோல் ஆயத்தமானார். வெகு விரைவாக வாஷரை எடுத்துவிட்டார். ஆனால் சுஜா, வன்மம் நிறைந்த பார்வையை எதற்காக சக போட்டியாளர்களிடம் வீசினார் என்று தெரியவில்லை. ( சுஜாவிற்கு என்னதான் பிரச்சனை?)

அடுத்ததாக அவரவர் நிழற்படம் உள்ள சீட்டுகளைச் சேகரிப்பது என்ற டாஸ்க். மின்னல் வேகத்தில் இந்த டாஸ்க்கை வென்றுவிட்டார் பிந்து. சினேகன், வையாபுரி, சுஜா என அனைவரும் சாமர்த்தியமாக விளையாடினார்கள். அனால் இந்த டாஸ்க்கின் தொடக்கம் முதலே பதற்றத்தோடு அலைந்து திரிந்தார் ஹரீஷ். இதற்குக் காரணம், முந்தைய டாஸ்கில் அவர் வெற்றி பெற்றதுதான். அந்த வெற்றியைத் தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்போடு அதீதமாகச் செயல்பட, அது அவருக்கு பாதகமாக அமைந்துவிட்டது. பதற்றத்தின் காரணமாக பாக்கெட்டில் கார்டை வைத்துக்கொண்டு போட்டியாளர்களிடம் விசாரணை நடத்தினார் ஹரீஷ். கார்ட் கிடைக்காதபோது, அவர்களைக் கேவலமாகத் திட்ட முற்பட்டார். பிறகு தன் பாக்கெட்டில் கார்ட் இருப்பது தெரிந்த போதும் தன் தவறை மறைக்க யாரோ தன் பாக்கெட்டில் கார்டை வைத்துவிட்டார்கள் என்று சமாளித்தார். மனிதர்கள் அனைவருமே சந்தர்ப்பவாதிகள்தான்.

கோல்டன் கார்டைக் குடும்பமே தேடிக்கொண்டிருக்க, விளக்குகள் நிறுத்தப்பட்டன. அப்போதும் தேடும் படலம் தொடர்ந்தது. விடிந்ததும் ஆரவ் அந்த கார்டை சாமர்த்தியமாகத் தேடியெடுத்து ஐந்து புள்ளிகளைப் பெற்றார். துண்டுத் துணிகளை தைத்துப் போர்வையை உருவாக்க வேண்டும் என்றொரு டாஸ்க்கைக் கொடுத்தார் பிக் பாஸ். ஒரு நாளைக்கு இரண்டு டாஸ்க் என்றால் ஒன்று கடுமையானது. மற்றொன்று ஜாலியானது என்பது கணக்கு போலிருக்கிறது. ஆனால் இந்த டாஸ்க்கில் பெரிதும் பாதிக்கப்பட்டது குடும்பத்தின் பெரியண்ணன் வையாபுரிதான். ஊசியில் நூலைக் கோர்க்க அவர் பட்ட பாடு இருக்கிறதே..? எனக்கொரு சந்தேகம் வையாபுரி அண்ணா.. கண்ணாடி போட்டிருந்தால் இந்த சிக்கல் வந்திருக்காது அல்லவா? (பிக் பாஸ்…. பெரியண்ணனுக்கு ஒரு கண்ணாடி பார்சல்).

சினேகன் இதே தொழிலைச் செய்து பிழைப்பு நடத்தியதுபோல் அழகாகத் தைத்தார். டாஸ்க் என்று வந்துவிட்டால் சினேகன் எப்போதுமே கிங்தான். அவரை வெல்வது அத்தனை எளிய காரியம் அல்ல. சபாஷ் சினேகன் ஸார்.

அடுத்ததாக ஹைதர் அலி காலத்துக் கார் ஒன்று வந்து நின்றது. அதில் குடும்ப உறுப்பினர்கள் ஏழு பேரும் ஏற வேண்டுமாம். இறங்கும்போது தகுந்த காரணத்தைச் சொல்லி இறக்க வேண்டுமாம். எனக்குத் தெரிந்து ‘இட நெருக்கடி‘ என்பதுதான் ஒரே காரணமாக இருக்க முடியும். கார் நிறுத்தப்பட்டதும் மிகவும் வசதியாக டிரைவர் சீட்டில் அமர்ந்துகொண்டார் சினேகன். அந்த இருக்கைக்குள் மற்றவர்கள் அத்து மீறி நெருக்கடி கொடுக்க முடியாது. முன்பக்கம் ஆரவ், சினேகன், வையாபுரி, பின்பக்கம் சுஜா, கணேஷ், ஹரீஷ். பிந்து எங்கே என்று கேட்கிறீர்களா? பிந்து கணேஷின் மடியில். சுகமான சுமையென்றாலும் எத்தனை நேரம் சுமக்க முடியும்? கணேஷ் தன் கையையும் காலையும் வைத்துக்கொண்டு அந்த குட்டிக் காருக்குள் அமர்ந்திருப்பதே பெரும் சவால். இதில் பிந்துவும் வேறு. இரவு பதினொரு மணி வரை தாக்குப்பிடித்த பிந்து வேறு வழியில்லாமல் வெளியேறினார்.

முதல் வெளியேற்றத்திற்காகக் காத்திருந்த வையாபுரி வழக்கம்போலப் புலம்பத் தொடங்கிவிட்டார். பெல் அடித்ததும் துள்ளிக் குதித்து வெளியேறிவிட்டார். அடுத்தது ஆரவ்.. அடுத்தது கணேஷ்.

கணேஷ் வெளியேறும் முன் சுஜாவிற்கு விட்டுத்தரலாம் என்று சினேகனிடம் பரிந்துரைத்தார். ஆனால் இது விளையாட்டு. போட்டி என்று வந்துவிட்டால் அதில் பாவம் என்ன பழியென்ன? சினேகன் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இன்னும் சொல்லப்போனால் தொடக்கத்திலிருந்தே இது விளையாட்டு என்பதைச் சரியாக புரிந்துகொண்டு விளையாடும் ஒரே போட்டியாளர் சினேகன் மட்டும்தான். ஒருபுறம் மனம் நெகிழ்ந்து அழும்போதும் மறுபக்கம் நெஞ்சுரத்தோடு போராடிக்கொண்டிருக்கிறார். எனக்குத் தெரிந்து சினேனுக்கு வெற்றி வாய்ப்புகள் அனேகம் உள்ளன.

வெளியேறியவர்களைத் தன் அறைக்கு அழைத்து வெளுத்து வாங்கினார் பிக் பாஸ். வரும் நாட்களில் மீண்டும் இரண்டு நிமிடங்கள் கதவுகள் திறக்கப்படும். வெளியேற விரும்புபவர்கள் ஓடிவிடுங்கள் என்று எச்சரித்தார்.

பிக் பாஸ், விடியும் வரை வைத்து செய்யலாம் என்று திட்டம் போட்டிருப்பார் போலிருக்கிறது. ஆனால் போட்டியாளர்களுக்கு போட்டியைவிடத் தூக்கமும், உடல் வலியும் பெரிதாகிவிட்டது. என்ன செய்ய, அவர்களும் மனிதர்கள்தானே?

விடிந்த பிறகும் காரை விட்டு சினேகனோ சுஜாவோ இறங்குவது போல் தெரியவில்லை. சபாஷ் சரியான போட்டி…

இந்தப் போட்டியில் வெல்லப் போவது யார்…? உங்களைப் போலவே நானும் காண ஆவலோடு இருக்கிறேன்.

- வேட்டை பெருமாள்

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon