மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

மார்க்சிஸ்ட் விழாவில் பங்கேற்பா?: கமல் ட்வீட்!

மார்க்சிஸ்ட் விழாவில் பங்கேற்பா?: கமல் ட்வீட்!

கோழிக்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடக்கும் நிகழ்வில் நான் கலந்துகொள்ளவில்லை, விழா சிறப்பாக நடைபெறுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளுக்காக ட்விட்டரில் கருத்து தெரிவித்துவந்த நிலையில், கமல், கோவையில் நடைபெற்ற திருமண விழாவில், அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று தெரிவித்திருந்தார். கடந்த 1ஆம் தேதி கேரளா சென்றிருந்த கமல்ஹாசன், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து பேசினார், அரசியல் கற்றுக்கொள்ள வந்தேன் என்று அங்கு தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழ்நிலையில், வரும் 16ஆம் தேதி கோழிக்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடத்தவுள்ள வகுப்புவாத வன்முறைக்கு எதிரான தேசியக் கருத்தரங்கத்தில் கமல்ஹாசன் கலந்துகொள்ளப் போகிறார் என்றும், கமல்ஹாசன் மார்க்சிஸ்ட் கட்சியில் சேரப்போகிறார் என்றும் சமூக வலைதளங்களில் பேச்சு அடிபட்டது. பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, “கமல்ஹாசன் மார்க்சிஸ்டில் சேர முடிவெடுத்துவிட்டார் என்று கேள்விப்பட்டேன்” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்தச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன் இன்று (செப்டம்பர் 13) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கேரள முதல்வர் நடத்தும் கோழிக்கோடு மார்க்சிஸ்ட் விழாவுக்கு நான் அழைக்கப்படவில்லை, வரும் அக்டோபர் மாதம் வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் நான் பிக் பாஸ் நிகழ்வில் இருப்பேன். விழா சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon