மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

பருவ மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு!

பருவ மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு!

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது.

வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழகத்தில் மழை தொடர்ந்து பெய்துவருகிறது. தென்மேற்குப் பருவ மழை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 33 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் கிருஷ்ணகிரி அணை நிரம்பிவிட்டது. சாத்தனூர் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களிலும் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து 25ஆவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் சாரல் மழையின் காரணமாக அந்த மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையில் இன்று (செப்டம்பர் 13) காலை நிலவரப்படி 71.40 அடி நீர் இருப்பு உள்ளது. இந்த அணையின் கொள்ளளவு 143 அடி. தற்போது 1682 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக அணைக்கு வினாடிக்கு 144 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 54 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் 132.70 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ள நிலையில் அணைக்கு வினாடிக்கு 218 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த இரு வாரங்களாகப் பெய்யும் மழை காரணமாகக் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. குற்றாலத்தில் சீசன் முடிவடைந்த பின்னரும் தற்போது அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. ஐந்தருவியில் அனைத்துக் கிளைகளிலும் தண்ணீர் விழுகிறது. மெயின் அருவியிலும் தண்ணீர் அதிகமாக விழுகிறது. தற்போது சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக இருப்பதால், பொதுமக்கள் கூட்ட நெருக்கடி இல்லாமல் நீண்ட நேரம் குளித்து மகிழ்கின்றனர். குளிர்ந்த காற்றும் சாரலும் அடிப்பதால் குற்றாலம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இதமான நிலை நிலவுகிறது.

இந்த வருடத் தொடக்கத்தில் மழை பெய்யுமா என பொதுமக்களும், விவசாயிகளும் எதிர்பார்த்துக் காத்திருந்தது மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு போல மழை பொய்த்துவிடுமோ என அச்சத்திலும் இருந்தனர். ஆனால், தற்போது பெய்துவரும் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon