மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

ரூ.1000 நோட்டுகளை விரும்பும் மக்கள்!

ரூ.1000 நோட்டுகளை விரும்பும் மக்கள்!

சுமார் 70 சதவிகித மக்கள் பழைய 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டை விரும்புவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு கடந்த நவம்பர் 9ஆம் தேதி முதல் நீக்கம் செய்யப்பட்டது. பணமதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு பத்து மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் 70 சதவிகித மக்கள் 1000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் வெளியிடப்பட வேண்டும் என்று விரும்புவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. 2016ஆம் ஆண்டின் மார்ச் மாதம் வரையில் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளின் மொத்த எண்ணிக்கை 16.24 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதில் 86 சதவிகிதம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளே ஆகும். பணமதிப்பழிப்புக்கு பிறகு 99 சதவிகித 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பிவிட்டதாக கடந்த வாரம் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பின்னர் புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது. சமீபத்தில் புதிய 200, 50 ரூபாய் நோட்டுகளும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் 1000 ரூபாய் நோட்டுகளைப் புதிதாக அச்சிட்டு வெளியிட எந்தத் திட்டமும் இல்லை என்று அரசு தரப்பில் அறிவிப்புகள் வெளியாகின. ஹைதராபாத்தைச் சேர்ந்த வே2ஆன்லைன் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் 69 சதவிகித மக்கள் 1000 நோட்டுகளை விரும்புவது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ரூ.1000 நோட்டுகள் தேவையா என்ற கேள்விக்கு 69 சதவிகிதம் பேர் ‘வேண்டும்’ என்ற பதிலையே தேர்வு செய்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon