மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

சுங்கச்சாவடிகளில் ரவுடிகள்: நீதிபதிகள் கண்டனம்!

சுங்கச்சாவடிகளில் ரவுடிகள்: நீதிபதிகள் கண்டனம்!

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் ரவுடிகள் ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த பழனிக்குமார் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அதில், "சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. மேலும், அவசரக் கால வாகனமான ஆம்புலன்ஸ் செல்வதற்குத் தனிப் பாதை ஏற்படுத்தவில்லை. சுங்க கட்டணம் வசூலித்துவிட்டு மணல் லாரிகளைச் சாலையின் ஓரத்தில் நிறுத்த அனுமதித்து சுங்கச் சாவடி ஊழியர்கள் போக்குவரத்துக்கு இடையூறு செய்கின்றனர். அதனால், தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் லாரிகளை நிறுத்த அனுமதிக்கக் கூடாது" எனக் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான வழக்கு இன்று (செப் 13) நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தேசிய நெடுஞ்சாலை தலைமைப் பொது மேலாளர் ஆஜரானார். அப்போது, நீதிபதிகள் சுங்கச் சாவடிகளில், அவசர மருத்துவ வசதி மற்றும் மீட்பு வாகனங்கள் உள்ளனவா? கழிப்பறைகள் உண்டா ? சாதாரண நாட்களில் 6 வாகனங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற விதி பின்பற்றப்படுகிறதா? சுங்கச்சாவடி விதிமீறலில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? என்பன போன்ற கேள்விகளை எழுப்பினர்.

பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் ரவுடிகள், சமூக விரோதிகள் ஊழியர்களாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக பதிலளிக்குமாறு தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon