மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

பழனியப்பன் முன்ஜாமீன் மனு தாக்கல்!

பழனியப்பன் முன்ஜாமீன் மனு தாக்கல்!

நாமக்கல் காண்டிராக்டர் சுப்பிரமணியன் தற்கொலை வழக்கில், சிபிசிஐடி போலீசாரின் கைது நடவடிக்கையிலிருந்து தப்ப முன்னாள் அமைச்சரும், தினகரன் ஆதரவாளருமான எம்.எல்.ஏ பழனியப்பன், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் விஜயபாஸ்கரின் நண்பரும், நாமக்கல் அரசு காண்டிராக்டருமான சுப்பிரமணியன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனை தொடர்பாக சுப்ரமணியத்திடம் இருமுறை விசாரணை நடந்த நிலையில்,கடந்த மே மாதம் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன்பாக சுப்ரமணியன் எழுதியுள்ள கடிதத்தில் 'கடந்த 2011-16 அதிமுக ஆட்சியின்போது உயர்கல்விதுறை அமைச்சராக இருந்த பழனியப்பனிடம் தொடர்பில் இருந்து ஒப்பந்தம் பெற்ற ஒப்பந்தக்காரர்கள் தன்னை மிரட்டியதாக' குறிப்பிட்டிருந்தார்.

இதற்காக பழனியப்பனிடம் கடந்த ஜூலை மாதம் நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு பழனியப்பனுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பழனியப்பன் தற்போது தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் குடகு பகுதியிலுள்ள கூர்க் ரிசார்ட்டில் தங்கியுள்ளார். எனவே அங்கு விரைந்த தமிழக போலீசார் அவரை தனி இடத்தில் வைத்து விசாரித்ததாகவும், விரைவில் பழனியப்பன் கைது செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியாகியது. இதுகுறித்து இன்றைய காலை பதிப்பில் டார்கெட் பழனியப்பன் என்ற தலைப்பில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த சூழ்நிலையில் பழனியப்பன் தரப்பிலிருந்து முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ( செப்டம்பர் 13) மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவின் மீதான விசாரணை நாளை (செப்டம்பர் 14) நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon