மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

770 மருத்துவ மாணவர்களின் சேர்க்கை ரத்து!

770 மருத்துவ மாணவர்களின் சேர்க்கை ரத்து!

புதுச்சேரியில் 770 மருத்துவ மாணவர்கள் சேர்க்கையை ரத்து செய்ய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் 4 நிகர்நிலை கல்லூரிகள் 3 சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 7 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் 2016-17ஆம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ் இடங்களை நிரப்புவதில் விதிமீறல்கள் நடைபெற்றது. சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதி பெறாமலும், உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளை மீறியும் முறைகேடாக மாணவர்களைச் சேர்த்துள்ளது

மாநில அரசின் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெறவில்லை என்றும், நிர்வாக ஒதுக்கீட்டில் தவறுதலாக மாணவர்களைச் சேர்த்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அரசு தெரிவித்தது.

இந்நிலையில், கடந்த 2016 செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பின் புதுச்சேரியில் முறைகேடாகச் சேர்க்கப்பட்ட 770 மாணவர்களின் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்துள்ளது. தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் நிகர்நிலை பல்கலையில் படிக்கும் அவர்களை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் உடனடியாக வெளியேற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த 770 மாணவர்களும் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டு ஓராண்டு மருத்துவப் படிப்பை முடித்துள்ளனர். தற்போது படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்

கடந்த மார்ச் மாதம் உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், தமிழகம் ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்த 17 கல்லூரிகள் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக 519 மாணவர்களுக்கு நேரடியாக மருத்துவ இடங்களை வழங்கியது. 2016 செப்டம்பர் 28 ஆம் தேதி, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாநில அரசு கலந்தாய்வு நடத்தி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சில மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டதால் 519 மருத்துவ மாணவர்களின் அனுமதியை இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon