மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

சீனா செல்லும் ‘த்ருஷ்யம்’!

சீனா செல்லும் ‘த்ருஷ்யம்’!

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'த்ருஷ்யம்' படத்தின் ரீமேக் உரிமையை சீன நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது.

ஜீது ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'த்ருஷ்யம்'. வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

தமிழில் ஜீது ஜோசப் இயக்கத்தில் கமல், கௌதமி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் 'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிபெற்றது. தற்போது இப்படத்தின் ரீமேக் உரிமையை சீன நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. இதனால் விரைவில் சீன மொழியில் இப்படம் ரீமேக்காகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து மோகன்லால் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், "மலையாளத் திரையுலகம் பெரிய இடத்துக்கு நகர்ந்துவருகிறது. சீன நிறுவனம் ஒன்று 'த்ருஷ்யம்' படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியிருக்கிறது. இது மலையாளத் திரையுலகம் பெருமை கொள்ளும் விஷயமாகும். இதற்குக் காரணமான 'த்ருஷ்யம்' படக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சீனத் திரையுலகில் இந்தியப் படங்களுக்கான வரவேற்பு சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஆமிர் கானின் பி.கே., தங்கல் ஆகிய படங்கள் இந்திய சினிமாவுக்கான சந்தையை ஏற்படுத்தித் தந்தன. பாகுபலி படமும் வசூலில் சாதனை படைத்துவருகிறது. இந்திய மொழித் திரைப்படம் ஒன்றின் ரீமேக் உரிமையை சீனாவைச் சேர்ந்த நிறுவனம் கைப்பற்றுவது இதுவே முதன்முறையாகும்.

இயக்குநர் ஜீது ஜோசப் தற்போது மோகன் லால் மகன் பிரனவ் கதாநாயகனாக நடிக்கும் ஆதி என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறார்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon