மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

பாகிஸ்தான் வெற்றித் துவக்கம்!

பாகிஸ்தான் வெற்றித் துவக்கம்!

உலக லெவன்-பாகிஸ்தான் மோதும் முதலாவது டி20 போட்டி லாகூரில் நேற்று (செப்டம்பர் 12) நடந்தது. இதில் பாகிஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணிக்கு சர்ப்ராஸ் அகமது கேப்டனாகவும், உலக லெவன் அணிக்கு டு பிளிஸ்சிஸ் கேப்டனாகவும் செயல்பட்டனர். டாஸில் வென்ற உலக லெவல் அணி, பாகிஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தது. பாஃகர் ஜமன், அஹமத் சேஷாத் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரிலியே 2 பவுண்டரி அடித்த பாஃகர் ஜமன் அதே ஓவரில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய பாபர் அசாம் உலக லெவனின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். 2வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்த நிலையில் அஹமத் சேஷாத் 39ரன்னில் வெளியேறினார். பாபர் அசாம் 52 பந்துகளில் 86 ரன்கள் அடித்து தாகிர் சுழலில் வெளியேறினார். மாலிக் முதலில் நிதானமாக ஆடினாலும் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது.

198 ரன்ககளை இலக்காகக் கொண்டு களமிறங்கிய உலக லெவன் அணிக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. தமிம் இக்பால் 18 ரன்னிலும், ஆம்லா 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டு பிளிஸ்சிஸ் 18 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் சமி அடித்த 3 சிக்ஸர்கள் வெற்றிக்கு உதவவில்லை மாறாக ரசிகர்களை மட்டுமே உற்சாகப்படுத்தியது. இறுதியில் அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

சிறப்பாக ஆடிய பாபர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2வது டி20 போட்டி கடாபி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon