மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

நீட் மூலம் கிடைத்தது எத்தனை சீட்?

நீட் மூலம் கிடைத்தது எத்தனை சீட்?

அரசுப் பள்ளிகளில் படித்தவர்களில் 5 பேர் மட்டும் தான் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர் என்னும் தகவலை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். செப்டம்பர் 17ஆம் தேதியன்று பாமக சார்பில் விழுப்புரத்தில் நடக்க இருக்கும் சமூக நீதி மாநாட்டுக்கான அழைப்பாக, இன்று அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் நீட் தேர்வால் தமிழகத்துக்குக் கிடைத்திருக்கும் ’சமூக நீதி’ பற்றிய தகவலைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

“தமிழகத்தின் சமூகநீதிப் பயணத்தில் இன்றைய காலகட்டம் என்பது மிகவும் முக்கியமானதாகும். சமூக நீதியையும், சமத்துவத்தையும் குலைப்பதற்கான சதிகள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுவருகின்றன. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கு தமிழகத்தில் நடத்தப்பட்டுவந்த பொது நுழைவுத்தேர்வை பாட்டாளி மக்கள் கட்சி தான் சட்டப் போராட்டம் நடத்தியும், அரசியல் அழுத்தம் கொடுத்தும் 2007இல் ரத்து செய்ய வைத்தது. ஆனால், இப்போது தேசிய அளவில் நீட் என்ற பெயரில் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வை மத்திய அரசு திணித்திருக்கிறது. இதனால் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் மருத்துவக் கனவுகள் நொறுங்கிப் போய்விட்டன. மத்தியப் பாடத்திட்டத்தில் படித்ததுடன் சிறப்புப் பயிற்சியும் பெற்றவர்களுக்குத்தான் மருத்துவக் கல்வி சாத்தியமாகியிருக்கிறது.

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை தொடர்பாக நேற்று வெளியான இன்னொரு உண்மை இதயத்தில் வலியை ஏற்படுத்தியிருக்கிறது. நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களில் 5 பேர் மட்டும் தான் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். அதுவும் அவர்களில் மூவருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில்கூட இடம் கிடைக்கவில்லை. மாறாக தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில்தான் அதிக கட்டணம் செலுத்தி சேர்ந்துள்ளனர். இதுதான் நீட் தேர்வால் விளைந்த சமூக அநீதி’’ என்று சுட்டிக் காட்டியிருக்கிறார்.

மேலும், “இது மட்டுமின்றி, அரசுத் துறை வேலைவாய்ப்புகள், சம வாய்ப்புகள் ஏற்படுத்தித் தருதல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல் உட்பட சமூக நீதியின் அனைத்து அம்சங்களுமே இப்போது ஆபத்தான கட்டத்தில் உள்ளன. இட ஒதுக்கீட்டின் பயன்களை அனுபவிக்க முடியாதபடி தொடர்ந்து முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன. இத்தகைய சமூக அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவும், போராடிப் பெற்ற சமூகநீதியை பாதுகாக்கவும் தான் விழுப்புரத்தில் வரும் 17ஆம் தேதி மிகப் பெரிய அளவில் சமூகநீதி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 17ஆம் தேதி பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாள் மட்டுமல்ல. தமிழகத்தில் சமூக நீதி தழைப்பதற்காக 21 பாட்டாளிச் சொந்தங்கள் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த நாள். அந்தத் தியாகத் திருவுருவங்களின் நினைவு நாளை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ஆம் தேதி பாட்டாளிச் சொந்தங்களாகிய நாம் அனைவரும் போற்றிப் பெருமைப்படுத்துகிறோம். இந்த ஆண்டு இட ஒதுக்கீட்டு தியாகிகளுக்கு 30ஆவது ஆண்டு நினைவு நாள் என்பதால் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் சமூக நீதி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது’’ என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon