மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

உண்ணாவிரதப் போராட்டம்: திருமாவளவன்

உண்ணாவிரதப் போராட்டம்: திருமாவளவன்

நீட் தேர்வுக்கு எதிராக வருகிற 16ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாணவரணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டை அருகே பெருவாயலில் இன்று (செப்டம்பர் 13) நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “1980களில் நவோதயா பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்க அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கடுமையாக எதிர்த்தார். தற்போது, நவோதயா பள்ளிகளை தொடங்க மதுரை உயர் நீதிமன்றக் கிளை வழங்கிய தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.

நீதிமன்றங்கள் இந்தப் பள்ளிகளை நடத்த வேண்டும் என ஆணையிடுவது அரசின் கொள்கை முடிவுகளில், நாடாளுமன்ற அதிகாரத்தின் மீது தலையிடுவது ஆகும். நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் நிறுவ எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும். நீட் தேர்வுக்கு எதிராக வருகிற 16ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாணவரணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

21ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மாநில சுயாட்சி மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுவை முதல்வர் நாராயணசாமி, தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தோழமை கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். தமிழக அரசியலில் இந்த மாநாடு திருப்புமுனையாக அமையும். அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் அனைத்தையுமே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்புதான் முடிவு செய்யும்.

சாரண-சாரணியர் இயக்கம் என்பது இதுநாள் வரையில் அரசியல் சாயம் இல்லாமல் இருந்து வந்தது. சாரண-சாரணியர் இயக்கத் தலைவர் தேர்தலில் தற்போது எச்.ராஜா போட்டியிடுவது உள்நோக்கம் கொண்டது. அதனைக் கைப்பற்றி தங்களுடைய மதவாத அரசியலைத் திணிக்கும் உள்நோக்கம் கொண்டது. இது ஆரோக்கியமானது இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon