மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

தமிழகம் முழுவதும் நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம் !

தமிழகம் முழுவதும் நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம் !

தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை தாம்பரத்தில் கலந்துகொண்டுள்ள ஸ்டாலின், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என்று குற்றம் சாட்டினார்.

நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா, நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்காததால் வேதனையில் கடந்த 1 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் தன்னெழுச்சியாய் போராடி வருகின்றனர். நிர்பயா சட்டம் இயற்றப்பட்டது போல, அனிதா சட்டமும் இயற்றப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் சார்பில் கடந்த 8 ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான கண்டனப் பொதுக்கூட்டத்தில், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும் வரை தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்று ஸ்டாலின் அறிவித்தார். அதன் இரண்டாம் கட்ட போராட்டமாக (செப்டம்பர் 13) மாவட்ட தலைநகரங்களில் நீட் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் எதிர்கட்சிகள் சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய கனிமொழி," நுழைவுத் தேர்வு என்ற பெயரில் மாணவர்கள் வஞ்சிக்கப்படக்கூடாது , நுழைவுத் தேர்வை ரத்து செய்த மாநிலம் தமிழ்நாடுதான். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு ஓராண்டு படிப்புக்கு இடைவெளி விட்டு அந்த நேரத்தில் பணம் கொடுத்து கோச்சிங் சென்டரில் படித்துவிட்டு வந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குத்தான் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. இது நீட் தேர்வா அல்லது சாதாரண ஏழை, பின்தங்கிய மாணவர்கள் படிக்கக் கூடாது என்று வடிகட்டக் கூடிய தேர்வா?. கிராமப்புறங்களில் கோச்சிங் சென்டர்கள் உள்ளனவா?.என்று கேள்வி எழுப்பினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் எம்.எல்.ஏ., தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் கண்டன உரையாற்றிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின்,' தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெறவில்லை, பாஜக ஆட்சிதான் நடைபெறுகிறது. கடந்த ஜனவரி மாதம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானத்தின் நிலை என்ன. இதுகுறித்து மாநில அரசு, மத்திய அரசிடம் ஏன் கேள்வி எழுப்பவில்லை. திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தை ஆளுங்கட்சி தடுக்க முயன்றது.

எதற்கும் பதில் சொல்ல முடியாத ஒரு வக்கற்ற ஆட்சி மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வின் பயிற்சிக்காக 3 லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகிறது. இந்த கட்டணத்தை ஏழை மாணவர்கள் எப்படி செலுத்த முடியும். நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று கூறினார்களே அது என்ன ஆனது. நீட் தேர்வு முறை காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட போது, அதை முதன்முதலில் எதிர்த்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதிதான். அவர் தொடர்ந்த வழக்கில்தான், நீட்டை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. நீட் தேர்வால் தன்னுடைய மருத்துவ கனவு தகர்ந்ததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும். தமிழகத்தை காப்பாற்ற மக்கள் ஒன்றுதிரண்டு போருக்கு தயாராக வேண்டும்' என்று பேசினார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் போராட்டத்தில், திக தலைவர் வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், தா.பாண்டியன், ஜவாஹிருல்லா, சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகே நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்தில் புதுவை முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டுள்ளார்.

மேலும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக, மமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon