மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

ஜாக்டோ ஜியோ - போலீசார் இடையே மோதல்!

ஜாக்டோ ஜியோ - போலீசார் இடையே மோதல்!

திருச்சியில் போராட்டம் நடத்திவரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினருடனும் போலீசாருடனும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 7ஆவது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த 7ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன் தினம் (செப். 11) முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக 750 பெண்கள் உட்பட 1600 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று (செப்,13) திருச்சி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்

பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அவர்களைத் தடுத்து நிறுத்தும் போது போலீசாருக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஜாக்டோ ஜியோ அமைப்பினரை போலீசார் உள்ளே அனுமதிக்காததால் ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்போது தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும், மெமோ, கைது நடவடிக்கைகளுக்கு அஞ்ச மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சார்பில் கோவையில் 2000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்காலத்தில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் எந்த ஒரு காரியத்துக்காகவும் நீதிமன்றத்தை நாட முடியாத அளவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்தப் போராட்டத்தால் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் ஆசிரியர்களின் ஊதியத்தில் இருந்து இழப்பீடு வழங்க உத்தரவிட நேரிடும். 5 மாணவர்களுக்கு மட்டும் மருத்துவ இடம் கிடைத்துள்ளது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அவமானம். எதிர்கால தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு உள்ளவர்களே போராட்டம் நடத்தலாமா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும்,போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து வரும் செப்,18க்குள் பதில் அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon