மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

இனி தெலுங்கு கட்டாயம்!

இனி தெலுங்கு கட்டாயம்!

தெலங்கானாவில், ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தெலுங்கு மொழியைக் கட்டாய பாடமாகப் பயிற்றுவிக்க வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் டிசம்பர் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 5 நாட்கள் உலக தெலுங்கு மாநாடு நடைபெற உள்ளது. எனவே இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று(செப்டம்பர் 13) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறுகையில், “தெலுங்கு மொழியைக் கட்டாயப் பாடமாகப் பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கப்பட்டு, செயல்பட அனுமதி அளிக்கப்படும். தெலுங்கு மொழி விவகாரத்தில், பள்ளிகளுக்கு வேறு வழியில்லை. நமது தாய்மொழியான தெலுங்கை அவர்கள் கட்டாயப் பாடமாகக் கற்பிக்க வேண்டும். இந்த உத்தரவை மீறும் பள்ளிகளுக்கு, மாநிலப் பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளிக்காது.

அதேபோல், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரே மாதிரியான தெலுங்கு மொழிப் பாடப் புத்தகத்தைத் தயாரித்து வழங்க வேண்டும். அதற்காக, அனைத்துப் பாடங்களையும் தெலுங்கில் உருவாக்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளிலும் தெலுங்கு மொழி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்றும், தெலுங்குக்கு முன்னுரிமை அளிக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும் அவற்றை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon