மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

மாற்றத்தை நிகழ்த்துவாரா கௌதம்?

மாற்றத்தை நிகழ்த்துவாரா கௌதம்?

அருண் விஜய்யின் 25-வது படத்தை கௌதம் மேனன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைத்துறையில் 27 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அருண் விஜய் பெரிய ஹிட் படங்கள் கொடுத்தவர் அல்ல, ஆனால் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடித்துவருகிறார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் 'தடம்' படத்தில் கவனம் செலுத்தி வரும் அருண் விஜய், அதனைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் 'சாஹோ' படத்தில் நடிக்கவுள்ளார். இது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக உள்ளது. இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து தனது 25-வது படத்துக்காக கதைகள் கேட்டு வந்தார்.

இந்நிலையில், கௌதம் மேனன் அப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பாக, அஜித் நடிப்பில் உருவான 'என்னை அறிந்தால்' படத்தின் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போதே அருண் விஜய்யை நாயகனாக வைத்து படமொன்றை இயக்கவுள்ளதாக கௌதம் மேனன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தனது 25-வது படமென்பதால் இதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் அருண் விஜய். மேலும், இதற்காக சில காட்சிகளையும் படக்குழு காட்சிப்படுத்தி பார்த்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. தயாரிப்பாளர் மற்றும் உடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை.

என்னை அறிந்தால் படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அருண்விஜய் கௌதம் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அது அருண் விஜய்யின் திரைவாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon