மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

சரோஜாவின் ஸ்மார்ட் கார்டில் காஜல் அகர்வால்!

சரோஜாவின் ஸ்மார்ட் கார்டில் காஜல் அகர்வால்!

சேலத்தில் பெண் ஒருவருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டில் நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் அச்சிட்டுக் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ரேஷன் கார்டுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதுவரை ஒரு கோடியே 42 லட்சத்து 15 ஆயிரத்து 382 ஸ்மார்ட் கார்டுகள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள குடும்பங்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் அச்சிட்டு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், முறையாகத் திட்டமிடாமல் ஸ்மார்ட் கார்டு விநியோகம் செய்யப்படுவதாகவும், ஸ்மார்ட் கார்டு அச்சிடுவதில் அலட்சியம் காட்டுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காமலாபுரம் ஊராட்சி ஆர்.சி.செட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா (42). இவரது கணவர் பெரியசாமி இவர்களுக்கு இரு தினங்களுக்கு முன்னர் ஸ்மார்ட் கார்டு வருவாய் துறையில் இருந்து வந்துள்ளது. ஸ்மார்ட் ரேஷன் கார்டில் அவரது புகைப்படத்திற்குப் பதிலாக பிரபல நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் புகைப்படம் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும், அதுவரை பொருட்கள் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

அச்சடிக்கும் இடத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் இந்தத் தவறு நடந்திருக்கலாம் என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon