மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

பாஜக எதிர்கட்சிகள் மீது பொய்வழக்கு!

பாஜக எதிர்கட்சிகள் மீது பொய்வழக்கு!

பாஜக குறுகிய மனநிலையுடன் எதிர்கட்சிகள் மீது பொய்வழக்கு போடுகிறது என்று அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் நேற்று (செப்டம்பர் 12) லக்னோவில் உள்ள அவரது கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, அவர் கூறுகையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணி பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை முட்டாளாக்கி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இந்த காவிக் கட்சி குறுகிய மனநிலையுடன் செயல்படுகிறது. அரசியல் பழிவாங்கும் உணர்வுடன் எதிர் கட்சிகள் மீது பொய்வழக்கு போடுகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அகிலேஷ், "பாஜக மக்களை பிரிக்கிறது. எங்களுக்கு தேவை டிஜிட்டல் இந்தியா அல்ல. விவசாயிகளும் இளைஞர்களும் மகிழ்ச்சியாக வாழும் இந்தியாவே தேவை” என்று கூறினார்.

ரயில்வே துறையின் ஓட்டல்களைப் பராமரிக்கும் ஒப்பந்தத்தில் மோசடி செய்ததாக பீகார் மாநில ராஷ்டீரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலுபிரசாத் யாதவ், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதைக் காரணம் காட்டித்தான் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராஷ்டீரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக்கொண்டு அதற்கு பதிலாக பாஜகவுடன் கூட்டணி அமைத்து அரசமைத்தார். இதைத்தொடர்ந்து, அண்மையில் லாலு பிரசாத் எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து, பாஜகவை வெளியேற்றுவோம்.. தேசத்தைக் காப்போம் என்ற முழக்கத்துடன் பாட்னாவில் நடத்திய பேரணியில் அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon