மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

காய்ச்சலால் யாரும் உயிரிழக்கவில்லை!

காய்ச்சலால் யாரும் உயிரிழக்கவில்லை!

தமிழகத்தில் இதுவரை காய்ச்சலால் மட்டுமே யாரும் உயிரிழக்கவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று (செப்டம்பர் 13) நடைபெற்ற உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியவர், "ஊடகங்களில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படுவதாக செய்திகள் வரும்போது, அரசு தவறாமல் ஆய்வு செய்கிறது. காச்சலால் ஒருவர் இறந்தார் என்ற நிலை வந்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனத்துடன் இருக்கிறது. அதனால்தான், காச்சலால் இறப்பு என்ற செய்தி வந்தாலே அதை நாங்கள் ஆய்வு செய்கிறோம். இந்த இறப்பு எதனால் ஏற்பட்டது என்று ஆய்வு செய்கிறோம். ஒருவருக்கு காய்ச்சலால் மட்டுமே இறப்பு எற்படாது. அவர்களுக்கு பிற நோய்கள் இருந்து அதனுடன் காய்ச்சலும் சேர்ந்துகொள்ளும்போது, அதற்கு அவர்கள் சரியான சிகிச்சை செய்யாமல் இருக்கின்றபோதுதான் உயிரிழப்பு போன்ற விபரிதமான விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், தமிழகத்தில் காய்ச்சலால் மட்டுமே யாரும் உயிரிழக்கவில்லை” என்று கூறினார்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆகஸ்ட் மாதம் ரமேஷ் என்பவர் தமிழகத்தில் நிலவும் காய்ச்சல் உயிரிழப்பு தொடர்பாக ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தார். அதில், உயர் நீதிமன்றம் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் விவரம் குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய சுகாதார முதன்மை செயலருக்கு உத்தரவிட்டது. அதன்படி, தமிழக சுகாதாரத் துறை சார்பில் தாக்கல் செய்த மனுவில், 2017ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 15 பேர் உயிரிழந்ததாகவும் மர்ம காய்ச்சலுக்கு 32 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் காய்ச்சலால் மட்டுமே யாரும் உயிரிழக்கவில்லை என்று கூறியிருப்பது முரணாக உள்ளது.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon