மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

பாஜகவை இயக்கவில்லை: ஆர்.எஸ்.எஸ். தலைவர்

பாஜகவை இயக்கவில்லை: ஆர்.எஸ்.எஸ். தலைவர்

பாஜகவை ஆர்.எஸ்.எஸ்.ஸோ, ஆர்.எஸ்.எஸ்.ஸை பாஜகவோ இயக்கவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 50 நாடுகளின் தூதர்கள், அதிகாரிகள், சமூக நல அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளோடு நேற்று (செப்டம்பர் 12) ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் விரிவான கலந்துரையாடல் நடத்தினார். இந்தியாவின் அண்டை நாடுகள் உள்ளிட்ட 50 நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய இக்கூட்டத்தில் பாகிஸ்தான் நாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை.

இந்தக் கூட்டத்தில் பல நாட்டுப் பிரதிநிதிகளும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பற்றி மோகன் பகவத்திடம் கேள்விகள் கேட்டனர். அதற்கு பதிலளித்த மோகன் பகவத், “நான் இங்கே தெளிவாகச் சொல்கிறேன். ஆர்.எஸ்.எஸ்.ஸை பாஜக இயக்கவில்லை. பாஜகவை ஆர்.எஸ்.எஸ். இயக்கவில்லை. எங்களது சுயந்தனைகளின் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்குள் ஆலோசிக்கிறோம். அவற்றை வெளிப்படுத்துகிறோம். அதேநேரம் நாங்கள் பிரதமர் மோடியுடன் நல்லுறவோடு உள்ளோம். பல மத்திய அமைச்சர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களாக உள்ளார்கள்’’ என்றார்.

அயோத்தி விவகாரத்தில் தங்கள் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த மோகன் பகவத், “நாங்கள் எப்போதுமே அறவழியில் செல்பவர்கள். வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர்கள். அயோத்தி விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நாங்கள் கட்டுப்படுவோம்’’ என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா உள்ளிட்ட பல பாஜகவினரும் கலந்துகொண்டனர்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon