மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

நிவேதிதா : ஜோதிகாவின் செல்லப்பிள்ளை!

நிவேதிதா : ஜோதிகாவின் செல்லப்பிள்ளை!

மகளிர் மட்டும் திரைப்படத்தை ஜோதிகா எதிர்பார்ப்பதை விட இயக்குநர் பிரம்மா எதிர்பார்ப்பதை விட அதிகமாக எதிர்பார்த்துள்ளார் நிவேதிதா சதிஷ்.

யார் அந்த நிவேதிதா என்று எழும் கேள்வி நியாயமானதுதான். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு எதிர்பார்ப்புகளோடும் கனவுகளோடும் திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்திருப்பவர் நிவேதிதா.

தான் திரையுலகிற்குள் வந்த கதையையும் மகளிர் மட்டும் திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்தும் டெக்கான் கிரானிக்கலுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். “நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே நடனம் கற்று வருகிறேன். எனது பதின் வயதுகளில் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் அதிகமானது. ‘பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு உனது கனவுகளில் கவனம் செலுத்து’ என்று பெற்றோர்கள் கூறியதால் பனிரெண்டாம் வகுப்பு முடித்ததும் சினிமாவில் நடிக்க வாய்ப்புகளைத் தேடினேன். மகளிர் மட்டும் திரைப்படத்தின் கதாபாத்திர தேர்வில் கலந்துகொண்டு தேர்வானேன்” என்று தனது பின்புலம் பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார்.

சரண்யா பொன்வண்ணனின் இளவயது கதாபாத்திரத்தில் நடிக்கும் நிவேதிதா படப்பிடிப்பு தளத்தின் அனுபவங்களை பற்றி பேசும் போது, “ஒரு மாத கால ஒத்திகைக்குப் பின்னரே ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்பிரியா ஆகியோரை சந்தித்தேன். நாங்கள் மிகவும் நெருக்கமாகிவிட்டோம். அவர்களுக்கு செல்லப் பிள்ளையாகிவிட்டேன். நடிப்பு பயிற்சி பள்ளிக்கு செல்லவில்லையே என நான் வருத்தப்படவில்லை, ஏனெனில் நடிப்பில் உள்ள நுணுக்கங்களை எல்லாம் பிரம்மா சார் எனக்கு சொல்லிக் கொடுத்தார்” என்று கூறியுள்ளார்.

தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடிப்பதால் மகிழ்ச்சியில் இருக்கும் நிவேதிதா, செப்டம்பர் 15ம் தேதி தம்மை திரையில் காண ஆவலுடன் உள்ளார். தற்போது ‘ஹலோ’ என்று தலைப்பிடப்பட்டுள்ள தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். விக்ரம் குமார் இயக்கத்தில் ‘24’ படத்தில் நடித்திருந்த அகில் அகினேனி கதாநாயகனாக நடிக்கிறார்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon