மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

காந்தி ஜெயந்தி அன்று கட்சி?

காந்தி ஜெயந்தி அன்று கட்சி?

நடிகர் கமல்ஹாசன் விரைவில் தனது அரசியல் கட்சியை ஆரம்பித்து, வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தனது நற்பணி இயக்கத்தைச் சேர்ந்தவர்களை களமிறக்கப் போகிறார் என்று ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

சமீபநாட்களாக தமிழக அரசை சரமாரியாக எதிர்த்து பேட்டிகளும், ட்விட்டுகளும் கொடுத்து வரும் கமல்ஹாசன் ஒரு கட்டத்தில் பல அமைச்சர்களின் கண்டனத்துக்கு உள்ளானார். தமிழக அரசு ஊழல் அரசு என்றும், ஒவ்வொரு துறை தொடர்பான ஊழலை அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் கமல்.

இந்நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி கேரளா சென்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த கமல், ‘நான் அரசியல் கற்றுக் கொள்ள வந்தேன்’ என்று பேட்டியளித்தார். வரும் 16 ஆம் தேதி கமல்ஹாஸன் மீண்டும் கேரளா செல்கிறார். அங்கே கோழிக்கோடு நகரில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஏற்பாட்டில் நடக்க இருக்கிற, வகுப்புவாத வன்முறைக்கு எதிரான தேசியக் கருத்தரங்கத்தில் கலந்துகொள்கிறார்.

இத்தகைய பின்னணியில் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே அரசியல் புள்ளிகளைத் தேடிச் சென்றும், தன் வீட்டுக்கு வரவழைத்தும் அரசியல் தொடர்பான நீண்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைகளின் அடுத்த கட்டமாக தற்போது கட்சிக்குத் தேவையான சட்ட திட்டங்களை உருவாக்கும் ’டிராப்ட் மேக்கிங்’ பணியில் ஈடுபட்டிருக்கிறாராம் கமல்ஹாசன்.

’‘இதுதான் தக்க தருணமென கருதுகிறார் கமல். தனது கட்சி மற்றவர்களின் கட்சியைப் போல சராசரி அரசியல் கட்சியாக இருந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார். தன் கட்சி மூலம் மக்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று கருதுகிறார். வர இருக்கிற உள்ளாட்சித் தேர்தலில் சுமார் நாலாயிரம் வேட்பாளர்களை தனது நற்பணி இயக்கம் மூலம் நிறுத்த முடிவு செய்திருக்கும் கமல், அதற்கு முன் கட்சியை தொடங்கும் வேலையில் தீவிரமாக இருக்கிறார்.

ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி ஆகிய இரு வாய்ப்புகள் அவருக்கு இருக்கின்றன. கமலின் இயல்புப்படி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதவர். ஆகவே அக்டோபர் 2 ஆம் நாள் காந்தி ஜெயந்தி அன்று அவர் தனது புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கலாம் என்று அவருக்கு நெருக்கமான நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்’’ என்கின்றன ஆங்கில ஊடகச் செய்திகள்.

கமல் அறிவிக்காதவரை இதுவும் யூகம்தான்!

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon