மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

ப்ரோ கபடி: பெங்கால் வாரியர்ஸ் த்ரில் வெற்றி!

ப்ரோ கபடி: பெங்கால் வாரியர்ஸ் த்ரில் வெற்றி!

ப்ரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு ஹரியானாவிலுள்ள மோதிலால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற 73ஆவது லீக் ஆட்டத்தில், பெங்கால் வாரியர்ஸ் அணி, தெலுகு டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. முதல் ரைடில் ராகுல் சவுத்ரி ஸ்கோர் செய்யத் தவறினார். மணீந்தர் சிங் போனஸ் பாய்ன்டின் மூலம் வாரியர்ஸ் அணியின் ஸ்கோர் கணக்கைத் தொடங்கிவைத்தார். அடுத்த அடுத்த வீரர்கள் சீரான வேகத்தில் ஸ்கோர் செய்தனர். ஆரம்பத்தில் டைட்டன்ஸ் அணியினர் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். பிறகு சிறப்பாக ஆடி முதல் பாதியில் 15- 12 என முன்னிலை பெற்றனர். இரண்டாவது சுற்றில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், தொடக்கம் முதலே பரபரப்பாகச் சென்றது. இறுதியில் 32-31 என்ற புள்ளிக் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் `பி' பிரிவின் முதல் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டது.

இதே மைதானத்தில் இரவு 9 மணிக்கு நடந்த 74ஆவது ஆட்டத்தில், ஹரியானா ஸ்டீலர்ஸ் - டெல்லி தபாங் அணிகள் மோதின. ஹரியானாவின் வசீர், 2 புள்ளிகளுடன் ஆட்டத்தைத் துவக்கிவைத்தார். டெல்லி அணி 4ஆவது நிமிடத்தில் தான் முதல் பாய்ண்டை ஸ்கோர் செய்தது. இரு அணியின் ஸ்கோரும் கிட்டத்தட்ட சம நிலையில் சென்றபோது 9ஆவது நிமிடத்தில் வசீர் ரைட்டின் மூலம் 5 புள்ளிகள் பெற்று, ஹரியானா அணியை 12-4 என முன்னிலை பெறச் செய்தார். முதல் பாதியின் இறுதியில் அந்த அணி 17-8 புள்ளிகள் பெற்று முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி பெற்ற டெல்லி அணி மளமளவென ஸ்கோர் செய்யத் தொடங்கியது. இருப்பினும் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் டெல்லி அணி இறுதியில் தோல்வியைத் தழுவியது (24-27).

இன்று (செப்டம்பர் 13) நடக்கும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - யூபி யோதா (இரவு 8 மணி), ஹரியானா ஸ்டீலர்ஸ் - புனேரி பால்டன் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon