மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

வசனகர்த்தா ஆர்.கே. சண்முகம் மறைவு!

வசனகர்த்தா ஆர்.கே. சண்முகம் மறைவு!

தமிழ் சினிமாவுலகில் ஒரு திரைப்படம் பெரிதளவில் பேசப்படுவதில், கதை திரைக்கதையை தாண்டி வசனத்திற்கும் முக்கிய பங்குண்டு. எம்ஜிஆர், சிவாஜி படங்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றதற்கு அந்த படங்களில் இடம்பெற்ற வசனங்களும் காரணமாகும். அவ்விருவரின் படங்களுக்கு கதை வசனம் எழுதிய ஆர்கே சண்முகம் நேற்று (செப்டம்பர் 13) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆர்.கே சண்முகம், தனது 10 வயதில் சென்னைக்கு வந்தார். திரைப்படங்களில் அடிமட்ட தொழிலாளியாக இருந்து படிப்படியாக இயக்குநர் பிஆர் பந்துலுவின் உதவி இயக்குநரானார். கப்பலோட்டிய தமிழன் உள்ளிட்ட சிவாஜி கணேசன் நடித்த பல படங்களில் பணியாற்றினார்.

பின்னர் எம்ஜிஆர் படங்களுக்கு ஆஸ்தான வசனகர்த்தாவாகா மாறி, ஆயிரத்தில் ஒருவன், முகராசி, நினைத்ததை முடிப்பவன், சிரித்து வாழ வேண்டும், ரகசிய போலீஸ் 115, பல்லாண்டு வாழ்க, ஊருக்கு உழைப்பவன், தலைவன், தேடி வந்த மாப்பிள்ளை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.

ஆயிரத்தில் ஒருவனில், "தோல்வியையே அறியாதவன் நான்" என நம்பியார் பேச, "எதிரிகளுக்குத் தோல்வியைப் பரிசளித்தே பழக்கப்பட்டவன் நான்" என எம்.ஜி.ஆர் மறுமொழி உரைக்கும் வசனங்கள் பிரபலமானவை. அதே போல், "நடக்காததை அவர் சொன்னாரு...நடந்ததை நான் சொன்னேன்...நடக்க வேண்டியதை நீங்க சொல்லுங்க..." என ரிக்‌ஷாக்காரனில் எம்ஜிஆர் பேசும் நீதிமன்ற வசனமும் அன்றைய சூழலில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆர்கே சண்முகம் மறைவு குறித்து அவரின் இல்லத்துக்கு தொடர்பு கொண்ட போது, உடைந்த வார்த்தைகளால் அவரின் மூத்த மகள் சத்யா பேசினார். அவரின் மறைவுக்கு மின்னம்பலம் சார்பில் இரங்கல் தெரிவித்தோம். தொடர்ந்து பேசிய அவர், " நேற்று 6 மணிக்கே இறந்துட்டார். அப்பாவை எவ்வளவோ வற்புறுத்தி மருத்துவமனைக்கு அழைத்தும் வரமாட்டேன் என எம்ஜிஆர் கொடுத்த வீட்டிலே இறந்து விட்டார்" என அழ ஆரம்பித்தார். மேலும், இன்று மாலை மூன்று மணியிலிருந்து நான்கு மணிக்குள் இறுதிச்சடங்கு நடைபெற இருக்கிறது என்றும், கவிஞர் முத்துலிங்கம், அரசியல் பிரமுகர்கள் பலர் நேரில் ஆறுதல் தெரிவித்தனர் என்றும், சத்யராஜ் போனில் தொடர்பு கொண்டு வருத்தத்தை தெரிவித்தார்" எனவும் கூறினார்.

அவரின் இறுதிச் சடங்கு கிருஷ்ணா பேட்டை லாயிட்ஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற இருக்கிறது. ஆர்.கே சண்முகத்துக்கு தேவி என்கிற மனைவியும் நான்கு மகள்களும் உள்ளனர்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon