மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

தியாகம் தோற்றதாக வரலாறு இல்லை!

தியாகம் தோற்றதாக வரலாறு  இல்லை!

வித்தியாசமான முறையில் நடந்து முடிந்துள்ளது "நெடுநல்வாடை" திரைப்படத்தின் இசை வெளியீட்டு. இந்த விழா வழக்கமாக நடைபெறும் சினிமா விழாக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பிரபலங்கள், சிறப்பு விருந்தினர்கள் என்று யாரும் இல்லாமல் புதுவிதமாக நடைபெற்றது. 50 நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கும் இப்படத்தின் இசையை பொதுமக்கள் முன்னிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் படத்தில் பணியாற்றியவர்கள் சேர்ந்து வெளியிட்டனர்.

மேலும், பாடல்களைக் கேட்ட பொதுமக்களையே மேடையேற்றிப் பாடல் குறித்த அவர்களது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள வைத்தனர். வழக்கமாகப் பிரபலங்கள் வெளியிட்டுப் பாடல்கள் மக்களைச் சென்றடையும். ஆனால், இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மூலமாக, பிரபலங்களைச் சென்றடைந்துள்ளது.

இப்படம் மற்றும் பாடல்கள் குறித்து பாடலாசிரியர் வைரமுத்து கூறும் போது, "தலைப்புப் பஞ்சம் பிடித்து ஆட்டுகிறது தமிழ் சினிமாவை. தமிழில் பேர் வைத்தால்தான் வரிச்சலுகை கிட்டும் என்று சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டிய அளவுக்கு தமிழ் சினிமாவில் தலைப்புகள் தமிழைவிட்டு தள்ளிப்போய்க் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஈராயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு தமிழ் இலக்கியத்தின் தலைப்பை, தனக்கு ஆபரணமாகச் சூடிக்கொண்டு வெளிவரப் போகிற படம்தான் 'நெடுநல்வாடை'. இந்தப் படத்திற்குப் பாட்டெழுதியது எனக்கு ஒரு சுகமான அனுபவம். நெல்லை மாவட்டத்து வட்டார வழக்கில் எழுதுங்கள் என்றும், ஆங்கிலச் சொல்லே கலவாமல் முழுக்க முழுக்க தமிழ் பாட்டு எழுதுங்கள் என்றும் இயக்குநர் செல்வகண்ணன் கேட்டபோது நான் மகிழ்ந்து போனேன்" என்று கூறினார்.

“ஒரு படத்தில் பாட்டு என்பது, உடலில் தொங்குகிற ஆடையாக இல்லாமல் உடம்பில் ஒட்டியிருக்கும் தோல் மாதிரி இருக்கவேண்டும். படத்திற்கும் பாட்டுக்கும் இடைவெளியே இருக்கக் கூடாது. இந்த இலக்கணத்தை 'நெடுநல்வாடை' யில் காணமுடிந்தது. கிராமத்து வாழ்வியலைப் பின்புலமாகக் கொண்ட இந்தக் கதையில், இன்னும் அறுந்து போகாத தமிழ்க் கலாச்சாரத்தின் பழைய வேர்களைத் துப்பறிந்திருக்கிறார் இயக்குநர் செல்வகண்ணன்.”

“நம் உறவுகள் புனிதமானவை. நம் உறவுகள் ஆழமானவை. அந்த உறவின் பெருமையை, மகள் வழிப்பேரனை ஒரு தாத்தா எப்படியெல்லாம் நேசிக்கிறார் என்ற அடிப்படைப் பண்பாட்டை 'நெடுநல்வாடை' யில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழர்களின் உறவின் மிச்சத்தையும், எச்சத்தையும், உச்சத்தையும் சொல்லும் படமாகத் திகழும் என்று நான் நம்புகிறேன். ஒரு கிழவன் செய்கிற தியாகம்தான் "நெடுநல்வாடை"யின் மொத்தக்கரு. தியாகம் தோற்றதாக வரலாறே இல்லை. தியாகத்தை உள்ளடக்கமாகக் கொண்ட நெடுநல்வாடையும் வெல்லும்” என்று வைரமுத்து கூறியுள்ளார்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon