மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

2022ஆம் ஆண்டில் புல்லெட் ரயில் சேவை!

2022ஆம் ஆண்டில் புல்லெட் ரயில் சேவை!

இந்தியாவின் முதல் புல்லெட் ரயில் சேவையை மும்பை முதல் அகமதாபாத் வழித்தடத்தில் அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. ஜப்பானின் நிதி உதவியோடு இந்தப் பணிகள் நடைபெறவுள்ளன.

நாளை (14.09.2017) இந்திய பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே இருவரும் இந்தியாவில் தொடங்கவிருக்கும் முதல் புல்லெட் ரயில் சேவைக்கான அடிக்கல் நாட்டுகின்றனர். இந்தியாவின் 75ஆம் ஆண்டு சுதந்திர தினமான 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இந்த ரயில் சேவையை நடைமுறைக்குக் கொண்டு வருவோம் என்று ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறும்போது, "புல்லெட் ரயில் சேவைக்கான திட்டம் தயாரிக்கப்பட்ட போது 2023ஆம் ஆண்டுக்குள் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி, இந்தியப் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். அவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பாகவே விரைந்து பணிகளை முடித்து விடுவர் என்று கருதுகிறார். இந்தத் திட்டத்தின் மூலம் 12-15 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். அதில் கட்டுமானத் துறையில் 20,000 பேருக்கும், நேரடி வேலைவாய்ப்பாக 4,000 பேருக்கும், மறைமுக வேலைவாய்ப்பாக 20,000 பேருக்கும் வேலை கிடைக்கும். இந்தியா குறைந்த செலவில் சர்வதேச தரத்தில் புல்லெட் ரயில் சேவையை அமைக்கிறது" என்றார்.

அகமதாபாத் முதல் மும்பை வரையிலான 508 கி.மீ. தொலைவிற்கு புல்லெட் ரயில் சேவை தொடங்க ரூ.1,10,000 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ரூ.88,000 கோடியை ஜப்பான் கடனாக வழங்குகிறது. 0.1 சதவிகித வட்டியுடன் 50 வருடத்தில் இந்தக் கடனை திருப்பிச் செலுத்தும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. திருப்பிச் செலுத்தும் காலத்தை 15 வருடம் அதிகரிக்கவும் ஒப்பந்தம் அனுமதி அளிக்கிறது.

மும்பை முதல் அகமதாபாத் வரையிலான 508 கி.மீ. தொலைவை இந்த ரயில் 2 மணி 58 நிமிடங்களில் கடக்கும். இடையில் தானே, விரார், போய்சர், வாபி, பிளிமோரா, சூரத், பாருச், வதோதரா, ஆனந்த், சபர்மதி ஆகிய 10 இடங்களில் நின்று செல்லும். மணிக்குத் தோராயமாக 320 கி.மீட்டரும், அதிகபட்சமாக 350 கி.மீட்டரும் செல்லும். இந்நிலையில் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த ரயில் சேவை தொடங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அண்டை நாடான சீனா புல்லெட் ரயில் சேவையை 2010ஆம் ஆண்டிலேயே தொடங்கியது. தற்போது மணிக்கு 4000 கி.மீ. வேகத்தில் செல்லும் ஹைப்பர்லூப் ஆராய்ச்சியில் சீனா ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon