மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

முதல்வர் நீக்கம்: தினகரன் மீண்டும் அறிவிப்பு!

முதல்வர் நீக்கம்: தினகரன் மீண்டும் அறிவிப்பு!

பொதுக்குழுவில் தினகரனின் அறிவிப்புகள் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதிமுக தலைமை நிலையச் செயலாளர் பதவியிலிருந்து முதல்வர் பழனிசாமியும், பொருளாளர் பதவியிலிருந்து திண்டுக்கல் சீனிவாசனும் நீக்கப்படுவதாக தினகரன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்ததைத் தொடர்ந்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் முதல்வருக்கான ஆதரவை வாபஸ் பெற்றனர். தொடர்ந்து தினகரன் தனது அதிரடியைக் கட்சியிலும் செலுத்த ஆரம்பித்தார். முதலில் வைத்திலிங்கத்தைக் கட்சியிலிருந்து நீக்கியவர், தொடர்ந்து முதல்வரின் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவி உள்ளிட்ட அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளைப் பதவியிலிருந்து நீக்கினார். இதில் முதல்வரின் மாவட்டச் செயலாளர் பதவியை மட்டும் பறித்த தினகரன், தலைமை நிலையச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கவில்லை.

இதற்கிடையே நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில், தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது ரத்து செய்யப்படுகிறது என்றும், தினகரன் அறிவிப்புகள் செல்லாது என்றும் தெரிவிக்கப்பட்டது. கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு எதிர்வினையாற்றிய தினகரன், “அது பொதுக்குழு அல்ல, வெறும் கூட்டம்” என்று தெரிவித்தார்.

பொதுக்குழுவில் தினகரனின் அறிவிப்புகள் செல்லாது என்று தீர்மானம் கொண்டுவந்தாலும், தினகரன் தன்னுடைய அதிரடியைத் தொடர்ந்து கொண்டுதான் உள்ளார். நேற்றைய தினம் (செப்டம்பர் 12) தினகரன் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பில், ‘அதிமுக தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கப்படுகிறார். அவருக்குப் பதிலாக பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ. பழனியப்பன் அந்தப் பதவியில் நியமனம் செய்யப்படுகிறார். அதேபோல பொருளாளர் பதவியிலிருந்து திண்டுக்கல் சீனிவாசன் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக தஞ்சாவூர் எம்.எல்.ஏ. எம்.ரெங்கசாமி பொருளாளராக நியமிக்கப்படுகிறார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வரைக் கட்சிப் பதவியிலிருந்து நீக்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் செப்டம்பர் 10ஆம் தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நீக்க அறிவிப்பு நேற்று தான் வெளியாகியுள்ளது. அதாவது பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் குறித்த எந்த அறிவிப்பும் இல்லையென்றால் முதல்வர் நீக்கம் பற்றிய அறிவிப்பு வெளியிட வேண்டாம் என்றும், தங்களுக்கு எதிரான நிலைப்பாடு வந்தால் உடனே வெளியிட வேண்டுமென்பதற்காகவும் முன்கூட்டியே இந்த அறிவிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon