மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

காங்கிரஸ் தலைமையேற்கத் தயார்: ராகுல் காந்தி!

காங்கிரஸ் தலைமையேற்கத் தயார்: ராகுல் காந்தி!

காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்க தான் தயாராக இருப்பதாகவும், ஆனால் அது, தான் மட்டும் எடுக்கும் முடிவு இல்லை என்றும் அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

சமீபகாலமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவால் ஓய்வெடுத்து வருகிறார். மேலும், அவர் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக டெல்லியைத் தவிர வெளிமாநில பயணங்களைத் தவிர்த்து வருகிறார். இதனால் இந்தியா முழுவதும் தற்போது காங்கிரஸின் முகமாக பயணிப்பது துணைத் தலைவர் ராகுல் காந்திதான். தொடர்ந்து கடந்த சில மாதங்களாகவே ராகுல் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படலாம் என்ற பேச்சும் பரவலாக இருந்துவருகிறது.

இந்தச் சூழ்நிலையில் இரண்டு வார காலச் சுற்றுப்பயணமாக ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து உரையாடும் ராகுல், அதன் ஒருபகுதியாக நேற்று (செப்டம்பர் 12) பெர்க்லி பல்கலைக்கழகத்தில் ‘இந்தியா 70: முன்னோக்கிய பாதையின் பிரதிபலிப்பு’ என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அங்கு மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ராகுல், “என்மீது வாரிசு அரசியல் தொடர்பான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். ஆனால், இந்தியாவில் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இது ஒரு பொதுவான பிரச்னைதான். உத்தரப்பிரதேசம் அகிலேஷ் யாதவ் முதல் தமிழகத்தின் ஸ்டாலின் வரை வாரிசு அரசியல் என்பது இருந்து வருகிறது” என்றார்.

‘காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பேற்பீர்களா?’ என்ற கேள்விக்கு, “காங்கிரஸ் தலைவர் பொறுப்பை நான் ஏற்பதற்குத் தயாராக உள்ளேன். ஆனால், அது நான் மட்டும் எடுக்கும் முடிவு அல்ல, அது கட்சியின் முடிவு. அதை கட்சிதான் அங்கீகரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

“2012ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்களிடமிருந்து காங்கிரஸ் விலகிச் சென்றதால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தோம். மக்களுடனான உரையாடலை காங்கிரஸ் கைவிட்டிருந்தது. மேலும், பிரதமர் மோடியிடம் சில சிறப்பம்சங்கள் உள்ளன. என்னை விட அவர் சிறந்த பேச்சாளர்” என்றும் தெரிவித்தார்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon