மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

நாம யாருன்னு காட்டுவோம்!

நாம யாருன்னு காட்டுவோம்!

தினகரன் செம அப்செட்டில் இருக்கிறார். எதெல்லாம் நடந்துவிடக் கூடாது என நினைத்தாரோ அதெல்லாம் நடந்துவிட்டது. சசிகலாவைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கியது அதிமுக பொதுக்குழு. அதைவிட தினகரன் விஷயத்தில், ‘கட்சியிலேயே அவர் இல்லை. அவரை எதுக்குக் கட்சியை விட்டு நீக்க வேண்டும்’ என அவரை கண்டு கொள்ளாமல் விட்டனர். தினகரன் அறிவித்த நீக்கமோ, அறிவிப்போ எதுவும் செல்லாது என்றும் சொல்லிவிட்டனர். மதுரையில் தினகரன் இருந்த சமயத்தில்தான் இந்த அறிவிப்புகள் வந்தது. அங்கே மீடியாவை சந்தித்துவிட்டு சென்னைக்குப் புறப்பட்டவர், சென்னையில் மீடியா மைக்கை நீட்டியபோதும் எதுவுமே பேசாமல் அமைதியாக சென்றுவிட்டார்.

தினகரன் வீட்டுக்கு வந்ததுமே பெரம்பூர் எம்.எல்.ஏ. வெற்றிவேலை வரச் சொல்லி இருக்கிறார். வெற்றிவேலுடன், வி.பி.கலைராஜன் உள்ளிட்ட சில நிர்வாகிகளும் அவரது வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். வீட்டுக்கு யார் வந்தாலும் சிரித்த முகத்துடன், ‘வாங்க.. வாங்க...’ என வரவேற்பது தினகரன் வழக்கம். ஆனால், எதுவுமே பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாராம். “நாமும் நம்மால் முடிஞ்ச எல்லா முயற்சிகளையும் நாம செஞ்சுட்டோம். ஆனால், அவங்க நம்ம முயற்சிகளை எல்லாம் முறியடிச்சுட்டாங்க. எடப்பாடி பேசியதெல்லாம் துரோகத்தின் உச்சம். நீங்கதான் ஆட்சி வேணும்... எடப்பாடிதான் வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தீங்க. இனி எடப்பாடி ஆட்சி இருந்தால் என்ன... போனால் என்ன? இனியும் நீங்க அமைதியா இருந்தா அதுக்கு அர்த்தமே இல்லாமல் போயிடும்...” என்று வெற்றிவேல்தான் முதலில் பேசி இருக்கிறார்.

அதை அமைதியாக கேட்டுக்கொண்ட தினகரன், “எனக்கு புரியுது. அம்மாவோட ஆட்சி எந்தக் காரணத்துக்காகவும் இல்லாமல் போயிடக் கூடாதுன்னுதான் நான் பொறுத்துட்டு இருந்தேன். இனி அமைதியாக இருக்க மாட்டேன். நாம யாருன்னு அவங்களுக்குக் காட்டுவோம். நம்ம தயவு இல்லாமல் அவங்க எப்படி இனி கவர்மென்ட் நடத்துறாங்கன்னு பார்க்கலாம்... இதுக்காக நாம யார் கூட வேணும்னாலும் கைகோக்கலாம்..” என்று கோபத்துடன்தான் சொன்னாராம். கூர்க்கில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்களுடன் உடனே மீட்டிங்குக்கு ஏற்பாடு செய்யுங்க என்றும் தினகரன் சொன்னதாகச் சொல்கிறார்கள். விரைவில் அதற்காக பெங்களூரு போகவும் ஏற்பாடுகள் நடக்கிறது.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon