மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

தமிழ் ராக்கர்ஸ் - தமிழ் கன்: கைதுக்குக் கைவிரிப்பு!

தமிழ் ராக்கர்ஸ் - தமிழ் கன்: கைதுக்குக் கைவிரிப்பு!

திரையுலகத்துக்குப் பெரும் சவாலாக இருந்துவரும் பைரசி இணையதளங்களில் ஒன்றான ‘தமிழ் கன்’(Tamil Gun) இணையதளத்தின் அட்மின்கள் சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். புதிய திரைப்படங்கள் வெளியான அன்றே தமிழ் கன் இணையதளத்தின் அட்மின்களால் திருட்டுத்தனமாகப் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தன. இதனால் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்குப் பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டது. இணையதளங்களில் திருட்டுத்தனமாகப் படங்களை பதிவேற்றம் செய்வதைத் தடுக்கவும், அவ்வாறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மத்திய மாநில அரசுகளிடம் திரைத்துறையினர் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

காவல்துறையில் கொடுக்கப்படும் புகார்களை அடுத்து திருட்டு விசிடி விற்பனை செய்பவர்கள், உரிமம் பெறாமல் கேபிள் டிவிகளில் படங்களை ஒளிபரப்பியவர்கள் மட்டும் அவ்வப்போது கைதுசெய்யப்பட்ட நிலையில் இணையத்தில் பதிவேற்றம் செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் இருந்தது. இந்த நிலையில் சைபர் க்ரைம் துறையினரின் உதவியுடன், விஷால் மற்றும் அவரது சிறப்பு பைரசி தடுப்புக்குழு புதிய படங்களைத் தமிழ் கன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்த நான்கு பேரை கண்டுபிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபர் வேலூரிலுள்ள திருப்பத்தூர் பகுதியில் சிடி கடை வைத்திருந்த கௌரி சங்கர் என்பவராவார். இவரை விஷால் மற்றும் அவரது குழுவினர் திருவல்லிக்கேணி டி1 காவல்நிலையத்தில் நேற்று (12.09.17) இரவு ஒப்படைத்தபிறகு கிட்டத்தட்ட பத்தரை மணியளவில் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். அவரைத் தொடர்ந்து சென்ற ஒற்றன் செய்திகளின் நிருபர் துரை அவர்களின் கண் பார்வையிலேயே, வேறு ஒரு காரில் வைத்து அவர் கொண்டுசெல்லப்பட்ட இடம் தெரியவில்லை. டி1 ஸ்டேஷனில் இதுகுறித்து விசாரித்தபோது, மாஜிஸ்திரேட் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கலாம் எனத் தெரிவித்தனர்.

ஆனால், இந்த செய்தி இணையதளங்களில் பரவத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின்களால் ‘பொய் செய்தி பரப்புகிறார்கள்’ என்று சமூக வலைதளங்களில் அவர்களாலேயே பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. திருட்டுத்தனமாக படங்களை இணையதளங்களில் ரிலீஸ் செய்யும் அட்மின் கைது என்று தகவல்கள் வெளியானதுமே, அவர் தமிழ் ராக்கர்ஸ் அட்மினாகத் தான் இருக்க வேண்டும் என்று சில தொலைக்காட்சிகளில் செய்திகள் ஒளிபரப்பப்பட்டன. எனவே, தமிழ் ராக்கர்ஸ் இணையதள அட்மின் அந்தத் தகவலைப் பகிர்ந்தார். ஆனால், அதே சமயத்தில் தமிழ் கன் இணையதள அட்மினின் ஃபேஸ்புக் அக்கவுன்ட்டிலும் எல்லா அட்மின்களும் பத்திரமாக இருக்கிறார்கள் என்று புயலால் பாதிக்கப்பட்ட நகரத்திலிருந்து பாதுகாப்பு குறித்த செய்தி வெளியிடுவது போல தமிழ் கன் அட்மின்களும் அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றனர்.

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்டபோது விஷால் கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்றின் முதல்படியில் இப்போதுதான் காலடி எடுத்துவைத்திருக்கிறார். அவருக்கும், தமிழ் கன் அட்மின் எனச் சொல்லப்படும் நபரைப் பிடிப்பதற்குப் பல மாதங்களாக சுற்றித்திரிந்த விஷாலின் டீமுக்கும் பாராட்டுகள் நிச்சயம் உண்டு. அதேவேளையில், கௌரி சங்கர் என்ற கேரக்டருக்கும் எங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று சொல்லியிருக்கும் இந்த இரு இணையதளங்களின் பேச்சையும் ஒதுக்கிவிட்டு விஷாலும், போலீஸ் தரப்பும் சொல்வது மட்டும்தான் உண்மை என நம்பிவிடவும் முடியாது. துப்பறிவாளன் பட ரிலீஸுக்கு புரமோஷன் செய்யவே விஷால் இப்படி செய்கிறார் என்று அவர்கள் மீம் போட்டு கலாய்த்திருக்கிறார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டு உண்மையான குற்றவாளி தண்டிக்கப்படும்வரை காத்திருப்போம்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon