மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

ஜாக்டோ - ஜியோ: போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!

ஜாக்டோ - ஜியோ: போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!

ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் போராட்டம் காரணமாக ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வராததை எதிர்த்து திருப்பூரில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் 7ஆவது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த 7ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோன்று திருப்பூர் நெசவாளர் காலனி பகுதியில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர்களும் கடந்த 7ஆம் தேதி முதல் போராட்டத்தில் கலந்துகொண்டு பணிக்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து திருப்பூர் பேருந்து நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு ஆதரவாகப் பெற்றோர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தகவலறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்டக் கல்வி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் போராட்டக்காரர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் பேருந்து நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon