மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 11 - உதய் பாடகலிங்கம்

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 11 - உதய் பாடகலிங்கம்

ஆசிரமத்தின் பல்வேறு முகங்கள்

எந்தவொரு விஷயத்திலும் அவசரப்படும்போது, எப்போதும் அசலைவிட நகலே நம் கைக்கு அருகில் இருக்கும். கடவுளை நெருங்கக் குறுக்குவழி தேடுபவர்களின் கண்களில் நகல்கள் தென்படுவதில்லை; போலிகளே அகப்படுகின்றன. இரண்டு நாள்களுக்கு முன்பு, அலகாபாதில் உள்ள அகில இந்திய அகாரா பரிஷத் எனும் அமைப்பு முக்கியமான போலிச் சாமியார்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் இடம்பெற்றிருக்கும் 14 பேரில் குர்மீத் ராம் ரஹீமும் ஒருவர்.

இந்த அமைப்பு, ‘போலிச் சாமியார்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறது. சீக்கிய மதத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்த தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவர் பெயரை, இந்துமத சாமியார்களின் பட்டியலில் இணைத்திருப்பது கண்டிப்பாக முரண்தான். அது சரி, முரண்களின் மூட்டையாகத் தன் வாழ்வை கழி(ளி)த்தவர்தானே குர்மீத் சிங்.

எந்தச் சமயத்திலும் குருவாக அடையாளம் காணப்படுவோர், ஆரம்ப காலத்தில் ஏழைகளுக்கானவராகவே அறியப்படுபவர். அவரைச் சுற்றியிருக்கும் கூட்டம் எந்த அளவுக்கு அதிகமாகிறதோ, அதற்கேற்றாற்போலச் சில ஆண்டுகளில் அவர் பணக்காரச் சாமியாராகிவிடுவார். அதுபோலவே, தேராவின் பக்தர்களின் எண்ணிக்கை வெள்ளமெனப் பெருக, குர்மீத்தைத் தேடிவரும் பிரபலங்களின் எண்ணிக்கையும் அதிகமானது.

சினிமா, விளையாட்டு, அரசியல், வணிகம் சார்ந்த பிரபலங்கள் பலர் சிர்ஸாவுக்கு வரத் தொடங்கினர். கல்வி மற்றும் மருத்துவ வசதிகளைத் தந்து எளியவர்களின் ஆதரவைப் பெற்ற குர்மீத், ஆசிரம வளாகத்தை நவீனமயமாக்கியதால் மேற்சொன்ன பிரபலங்களின் வரவேற்பைப் பெற்றார்.

ஆசிரமத்தின் இரு முகங்கள்

பள்ளிகள், கல்லூரிகள், தங்கும் விடுதிகள், மருத்துவமனை, மைதானம், காய்கறி மற்றும் பால் பண்ணை என்று தேராவின் ஒருபக்கம் இயங்கியது. சாதாரண மக்களைக் கவர இந்த அம்சங்கள் இருக்க, விஐபி பக்தர்களுக்காக இன்னொருபக்கம் விரிவாக்கப்பட்டது. ஆசிரமத்தினுள் இருக்கும் எம்எஸ்ஜி குளோரியஸ் சர்வதேசப் பள்ளியில், 5 நட்சத்திர விடுதி போன்ற உள் அலங்காரம் மற்றும் வசதிகள் நிறைந்திருக்கின்றனவாம்.

இதுதவிர, தேரா ஆசிரமத்தினுள் மேஜிக் ஷைனிங் கிராண்ட் என்ற பெயரில் விலையுயர்ந்த ரிசார்ட்கள் இருக்கின்றன. இந்தக் கட்டடங்கள் ஈபிள் கோபுரம், தாஜ்மஹால், டிஸ்னிலேண்ட் ஆகியவற்றின் வடிவமைப்பில் கட்டப்பட்டிருக்கின்றன. இது மட்டுமல்லாமல் பெண்களுக்கான ஜிம், நீச்சல் குளம், செவன் ஸ்டார் ஸ்பா மற்றும் எம்எஸ்ஜி ஃபுட் பார்ட்டி என்று பகட்டான தனித்த உலகமொன்று அங்கு இயங்கிவந்திருக்கிறது. இதுபோக, வெளிநாட்டவர்களுக்காக அண்டர்வாட்டர் ரிசார்ட் ஒன்றும் கட்டப்பட்டு, அதன் வேலைகள் பாதியில் நிற்கின்றன.

இளம் வீரர்கள், வீராங்கனைகளை உருவாக்குவதற்காக, ஆசிரம வளாகத்தினுள் ஒரு விளையாட்டு கிராமம் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள மைதானம், ஒலிம்பிக் போட்டிகள் நடத்தும் தரத்தில் பிரமாண்டமாக அமைந்திருக்கிறது. ‘இந்த விளையாட்டு கிராமம் இந்திய நாட்டுக்கு உயர் மதிப்புமிகுந்த பரிசு’ என்கிறது குர்மீத்தின் இணையதளம். இங்கு யோகா மற்றும் ஐஸ் ஹாக்கி வீரர்களுக்கு குர்மீத் சிங் பயிற்சியளித்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆசிரமத்தில் ஒரு ராஜாங்கம்

தேரா நிர்வாகம் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும், புதிதாகப் பல விஷயங்களைப் பரீட்சித்துப் பார்த்திருக்கிறது. இளைஞர்களை ஈர்க்க சினிமா தயாரிப்பில் இறங்கியது அவற்றில் ஒன்று. இதுபோல, ஆன்லைன் வணிகத்தில் கால் பதித்தது. சில நாள்களுக்கு முன்புவரை, இதன்மூலமாக 150 தயாரிப்புப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதவிர, எம்எஸ்ஜி ஸ்வதேஷி மற்றும் ஆர்கானிக் பொருள்கள் எனும் உணவு தயாரிப்பு நிறுவனமும் செயல்பட்டுவருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இதை குர்மீத்தின் வாரிசுகள் நிர்வகித்து வருகிறார்கள்.

ஆன்மிகத்தில் வணிகம் ஏன் நுழைந்தது என்று கேட்கக் கூடாது. ஏனென்றால், சிர்சா தலைமை ஆசிரமம் அமைந்துள்ள 700 ஏக்கர் பரப்பில் கிட்டத்தட்ட தனி ராஜாங்கமே நடந்துகொண்டிருந்தது. தேரா வளாகத்தில் புழக்கத்தில் இருந்த பிளாஸ்டிக் நாணயங்கள் அல்லது டோக்கன்கள் இதற்கு சரியான உதாரணம்.

தேரா தலைமையகத்தினுள் இயங்கிவந்த ‘சச்’(உண்மை) கடைகளில், மீதி சில்லறைக்குப் பதிலாக இந்த டோக்கன்கள் பயன்படுத்தப்பட்டன. 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்களுக்குப் பதிலாக இவை தரப்பட்டன. இவற்றை மொத்தமாகக் கொடுத்து, வேறு சச் கடைகளில் பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம். ‘தன் தன் சத்குரு தேரா ஹை ஆஸ்ரா’ மற்றும் ’தேரா சச்சா சவுதா சிர்ஸா’ என்று இதில் பொறிக்கப்பட்டிருக்கும். குர்மீத் கைதான பிறகு சச் கடைகள் மூடப்பட்டிருப்பதால், சாமானியர்கள் இதைக் கையில் வைத்துகொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கின்றனர்.

எந்தவித லாப நோக்கமுமற்ற, சமூக நலன் மற்றும் ஆன்மிக இயக்கம் என்று சொல்லிக்கொள்ளும் தேரா சச்சா சவுதா, உண்மையில் அப்படிச் செயல்படவில்லை. தன்னார்வத் தொண்டு நிறுவனம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், கடந்த காலங்களில் அவ்வாறு இயங்கவில்லை. கடந்த சில நாள்களாக, குர்மீத் பற்றி தினந்தோறும் பிரேக்கிங் நியூஸ்கள் வெளியாகின்றன. இவற்றில் பெரும்பாலானவை கடந்த 20 ஆண்டுகளில் வதந்தியாகவோ, அதிகாரபூர்வமற்ற தகவலாகவோ வந்தவைதான். மக்களை உண்மையாகவும் எளிமையாகவும் வாழச்சொன்ன குர்மீத் சிங், பகட்டான வாழ்வைச் சிறிதும் துறக்காதவர். இதுபோன்ற பல முரண்கள் ஒன்றுசேர்ந்து, குர்மீத்தை விநோத நாயகனாக்கி அழகு பார்த்திருக்கிறது.

நாளை...

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 1

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 2

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 3

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 4

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 5

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 6

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 7

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 8

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 9

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 10

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon