மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை நேற்று (செப்.12) ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை ஒரு சதவிகிதம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 4 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. இந்த உயர்வு ஜூலை 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், 49.26 லட்சம் அரசு ஊழியர்களும், 61.17 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதேவேளையில், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3,068.26 கோடி கூடுதலாக செலவாகும். 2017-18 நிதியாண்டில் ரூ.2,045.50 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவன ஊழியர்களின் பணிக்கொடை திருத்த மசோதாவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எனினும், குறைந்தபட்ச ஊதியத்தை 18 ஆயிரத்தில் இருந்து 21 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon