மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

சிறப்புக் கட்டுரை: மனிதர்களுக்குக் கொடுங்கள் போர்வையை! - சரவணன் சந்திரன்

சிறப்புக் கட்டுரை: மனிதர்களுக்குக் கொடுங்கள் போர்வையை! - சரவணன் சந்திரன்

விவசாயம் செய்பவர்கள் வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பருவ மழைகளை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். பல நேரங்களில் மக்கள் கிடாவெட்டி அம்மன்களுக்குப் பொங்கல் வைத்து மழையை எதிர்பார்த்துக் காத்தும் கிடக்கிறார்கள். திண்டுக்கல் பக்கம் ஒரு ஊரில் மழையை வேண்டி ஒரே நாளில் 150 கிடா வெட்டியிருக்கிறார்கள் என ஒரு குறிப்பைப் படிக்க நேர்ந்தது. எட்டுகிற தொலைவில் இருக்கிற மழை ஆரம்பித்துவிடும் என சாமியாடி அம்மன்கள் குறி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இன்னொரு பக்கம் ஆண்டாண்டுகளாகத் தொடரும் ஒரு துயரத்துக்காக இந்தப் பருவ மழைகளைச் சபிப்பவர்களும் இருக்கிறார்கள். இந்த மழை வந்து தொலையக் கூடாது என வேண்டிக்கொள்வார்கள் அவர்கள்.

முதன்முதலாகச் சென்னை வந்தபோது கண்ட காட்சியொன்று இப்போதும் நினைவில் இருக்கிறது. அப்போது மழை கொட்டிக்கொண்டிருந்தது. நேரு ஸ்டேடிய வாசலில் ஒரு குடும்பம், பிளாஸ்டிக் தார்ப்பாய்களால் தங்களை மூடிக்கொண்டு அந்த மழையில், அந்த சாலையில் அமர்ந்திருந்த காட்சி எப்போதும் நினைவுக்கு வரும். கடந்த மழையின்போது, ஆண்டிப்பட்டி பக்கத்திலிருந்து ஒரு பாட்டி, மந்திரி ஒருவரைப் பார்ப்பதற்காக ஆட்களுடன் சென்னைக்கு வந்திருந்தது. ஊர் ஆட்கள் பாட்டியைத் தவற விட்டுவிட்டனர். வேண்டுமென்றே செய்தார்களா என்றும் தெரியவில்லை. மழையில் ஒதுங்க இடமில்லாமல், தட்டழிந்து கொண்டிருந்தது அந்தப் பாட்டி. போக்கிடமில்லாமல் அலைந்து கடைசியில் எங்களுடைய கடை வாசலுக்கு வந்து சேர்ந்தது. என்ன வேண்டும் பாட்டி என்றபோது, உடனடியாக எனக்கு ஒரு போர்வை வேண்டும் என்றது. உண்மையாகவே உலுக்கிப்போட்ட தருணம் அது.

சென்னை மாநகராட்சியால் நடத்தப்படும் வீடில்லாதவர்களுக்கான தங்கும் மையத்தை அணுகியபோது, அவர்கள் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டனர். அந்த மையங்களெல்லாம் சமூக விரோதச் செயல்களுக்கென்றே ஒதுக்கிவிடப்பட்டிருக்கின்றன. பாட்டியைப் பத்திரமாகக் கடைப் பையன்கள் ஊருக்கு அனுப்பிவைத்தனர். இப்போதும் அந்தப் பாட்டி அடிக்கடி தொலைபேசி செய்து அன்பைக் கொட்டிக்கொண்டிருக்கிறது. இது ஓர் உதாரணம்தான்.

சர்வதேச முகத்தின் மறுபக்கம்

கடந்து போன மழைக் காலங்களில் என்ன வகையான துயரத்தையெல்லாம் அனுபவித்தோம் என்பது எல்லோருக்கும் நினைவிலிருக்கும். ஆனால், பல ஆண்டுகளாக இந்தத் துயரைச் சிங்கப்பூர் போன்ற சிங்காரச் சென்னையில் ஒரு பிரிவினர் தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர். சென்னை மெட்ரோபாலிட்டன் சிட்டி என்றெல்லாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். நட்சத்திர விடுதிகள் நிறைந்த நகரம். இங்கு கிடைக்காத உணவுகள் இல்லை. சர்வதேசத் தரத்தில் எல்லா வசதிகளும் இந்த நகரத்தில் இது போன்ற விடுதிகளில் கிடைக்கின்றன. ஆனால், இந்த சர்வதேச முகத்துக்கு நேரெதிரான சித்திரமாய் அந்த விடுதிகளுக்கு நூறடி தூரத்தில், வீடில்லாத ஆதரவற்ற மக்கள் மழைக்காலங்களில் ஒதுங்க இடமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இதுதான் நிதர்சனமான உண்மை. இதுவும் சென்னையின் உண்மையான முகம்தான்.

அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்பு ஒன்று எடுத்த ஆய்வின்படி, சென்னையில் மட்டும் 40,533 பேர் வீடில்லாமல் சாலைகளில் தங்கிக்கொண்டிருக்கின்றனர். பதினோராயிரம் குடும்பங்கள் அவை. துல்லியமாகக் கணக்கெடுத்தால் இன்னும்கூட அதிகமாக இருக்கலாம். என்னைப் போல சென்ட்ரல் ரயில் நிலையத்தில் படுத்துக் கிடந்தவர்களெல்லாம் இந்தக் கணக்கில் வர மாட்டோம் இல்லையா? இதில் குழந்தைகளும் பெண்களும் அடக்கம். கடை வாசல்கள், மேம்பாலத்துக்கு அடியில் என எங்கெல்லாம் பொந்து கிடைக்கிறதோ அங்கெல்லாம் அவர்கள் தங்களைச் செருகிக்கொள்கின்றனர்.

எலிப் பொந்துகள்

பொந்துகளில் வசிக்கும் எலிகளுக்கும் அவர்களுக்கும் வித்தியாசமில்லாத வாழ்க்கையைத்தான் அவர்களுக்கு இந்தப் பளபளப்பான நகரம் வழங்கியிருக்கிறது. மாதவரம், ராயபுரம், திருவிக நகர், வளசரவாக்கம் திருவொற்றியூர், மணலி ஆகிய பகுதிகளில்தான் இதுபோல வீடில்லாத ஆதரவற்றோர் சாலைகளில் அதிகமாகத் தங்கியிருக்கின்றனர். மூன்று தலைமுறைகளாக அப்படித் தங்கியிருப்பவர்களும் இருக்கிறார்கள் என்கிறது அந்த ஆய்வு. உச்ச நீதிமன்றம் இப்படித் தங்கியிருப்பவர்களுக்கான மீட்பு மையங்களை உருவாக்க வேண்டுமென உறுதியான குரலில் உத்தரவிட்டிருக்கிறது. 75 தங்கும் மையங்களைத் தொடங்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம். ஆனால், இந்த நிமிடம்வரை அதை இந்த அரசு செய்யவில்லை. 28 மையங்கள் மட்டுமே நடைமுறையில் செயல்படுகின்றன என்கிறது அந்த ஆய்வு. ஆனால், அந்த மையங்களைப் போய்ப் பாருங்கள்... யார் தங்கியிருக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெளிவாகத் தெரியும்.

அரசால் எத்தனையோ குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. அவற்றில் ஏதேனும் சிலவற்றை இவர்களுக்கு ஒதுக்கித் தர முடியாதா? கவுன்சிலர்களின் ஆதரவு இருந்தாலொழிய அந்தக் குடியிருப்புகளுக்கான டோக்கன்களை வாங்கவே முடியாது. சமீபத்தில் தினமலர் நாளிதழில் புகைப்படப் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். அந்தப் பதிவில் பெண் கவுன்சிலர் ஒருவர் தன்னுடயை ஆடி காரில் ஏறத் தயாராகும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியிருந்தது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு அந்த அக்கா எந்தக் காரில் போனார் என்று அவர் தொகுதியில் விசாரித்தால், கதை கதையாகச் சொல்வார்கள். கவுன்சிலர்கள் நினைத்தால் அடுத்த பத்து நாள்களில் தீர்க்கப்படக்கூடிய பிரச்னை இது. ஆனால், மனமும் ஆர்வமும் இல்லாத நிலையில்தான் ஒவ்வொரு வருடமும் இந்த மக்கள் மழையை அச்சத்துடன் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மழைக்கே புலம்பி ஒப்பாரி வைத்த சென்னை மக்கள் ஆண்டுதோறும் நடக்கும் இந்தத் துயரைக் கண்டும்காணாமல் கடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை புரட்டிப்போட்டால் நாமும் ஒருநாள் அப்படி சாலையோரவாசிகளாக மாற நேரிடலாம். யார் கண்டது? இப்போது மழை வலுக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த நேரத்தில் ஊடகங்கள் நினைத்தால், அடுத்த ஒரு வாரத்துக்கு இதைப் பற்றி எழுதி / பேசி தற்காலிகத் தீர்வையாவது இந்த விஷயத்தில் உடனடியாகக் கொண்டுவர முயற்சிக்கலாம். காதுள்ளவர்கள் கேட்கக் கடவார்களாக!

அதிகாலையில் காசிமேடு மீன் மார்கெட்டுக்குச் செல்லும்போதோ, அல்லது பேப்பர் விளம்பரங்கள் வைப்பதற்காகச் செல்லும்போதோ அவர்களை நெருக்கத்தில் பார்த்திருக்கிறேன். வயதுக்கு வந்த பெண்பிள்ளை ஒருத்தர் அச்சத்தோடு போர்வையைக் கண்ணுக்குப் பக்கத்தில் ஒதுக்கிப் பார்த்த காட்சி எப்போதும் வந்து போகும். தூங்காத விழிகளோடு எப்போதும் விழித்திருப்பவர்களை அங்கு கண்டிருக்கிறேன். தாம்பத்யம் தொடங்கி அத்தனை ஆசாபாசங்களும் வானத்தைப் பார்த்தபடிதான் நடக்கின்றன. தலைக்கு மேல் ஒரு கூரை என்பதுதான் இங்குள்ளவர்களின் அதிகப்பட்ச எதிர்பார்ப்பு.

வாழ்வில் எப்போதாவது ஒருநாள் அண்ணாந்து பார்த்து நட்சத்திரங்களை எண்ணிக் குதூகலப்படலாம். ஆனால், திறந்த வானத்தின் அடியிலேயே வாழ்க்கை விதிக்கப்பட்டால் என்ன செய்வது? இந்தக் கட்டுரையை இந்தியா முழுமைக்கும் விரித்து இந்தியிலும்கூட மொழிபெயர்க்கலாம். ‘ரொட்டி கப்டா மக்கான்’ என அதற்கு தலைப்பும் வைக்கலாம். இந்தியாவில் உள்ள அத்தனை கட்சிகளுமே இந்த கோஷத்தை ஒலித்திருக்கிறார்கள். சாமானியனான நான் என்ன செய்துவிட முடியும் என்று கேட்கலாம். அதுவும் உண்மைதான். முடிந்தால் போர்வைகளையாவது கொடுங்கள். மயிலுக்கே போர்வை கொடுத்ததாகச் சொல்லப்படும் சமூகத்திலிருந்து வந்த நம்மால் இதைக்கூடச் செய்ய முடியாதா என்ன?

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: சரவணன் சந்திரன், ஊடகவியலாளர், எழுத்தாளர். மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். பயணமும் வேளாண்மையும் இவரது செயல்பாடுகளின் மையம். தொடர்புக்கு: [email protected])

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon