மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

கட்டாயமாக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்கள்!

கட்டாயமாக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்கள்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டுக்கு மாறும்படி போக்குவரத்துத்துறை வலியுறுத்திவரும் நிலையில், தங்களது வாடிக்கையாளர்களை எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குமாறு கட்டாயப்படுத்த முடியாது என்று மாருதி சுஸூகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு முக்கிய காரணமாக இருப்பவை அதிகளவில் புகைகளை வெளியிடும் வாகனங்கள். இவ்வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் போலவே, சுற்றுச்சூழலும் நாளுக்கு நாள் மாசடைந்து வருகிறது. சுற்றுச்சூழல் அதிகமாக மாசுபடுவதாலும், பெட்ரோல், டீசல் இறக்குமதிக்கு அதிகம் செலவாவதாலும் பெட்ரோல் - டீசல் கார் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என மத்திய அரசு கருதுகிறது. மின்சாரத்தில் இயங்கும் பேட்டரி கார்கள் பயன்பாடு அதிகமாக இருந்தால் இந்த நிலை ஏற்படாது என்று கூறும் மத்திய அரசு, 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி முதல் ஒன்றரை கோடி வரையிலான பேட்டரி கார்களை விற்பனை செய்ய வேண்டும் என்று வாகன உற்பத்தியாளர்களுக்குக் கெடு விதித்துள்ளது.

மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சரான நிதின் கட்கரி சில தினங்களுக்கு முன்புகூட, வாகன உற்பத்தி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்புக்கு மாற வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி நிறுவனத் தலைவர் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த நிறுவனத் தலைவரான ஆர்.சி.பார்கவா, “சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பெருமளவில் உபயோகிக்க மத்திய அரசு பரிந்துரைப்பதை நான் ஏற்கிறேன். ஆனால், ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட பெட்ரோல் - டீசல் வாகனங்களை என்ன செய்வது? எலெக்ட்ரிக் வாகனங்கள் வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு ஏதுவாக இருப்பதாகக் கருதினால் மட்டுமே அவர்கள் வாங்குவார்கள். அவர்களை நாம் வற்புறுத்த இயலாது” என்று கூறியுள்ளார்.

எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு மாசுபாடு ஏற்படுத்தாது என்றாலும் அவற்றின் விலை சாதாரண வாகனங்களை விட மிகமிக அதிகமாக இருப்பதால் இவை அளவுக்கதிகமாக விற்பனையாவதில்லை.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon