மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

டார்கெட் பழனியப்பன்!

டார்கெட் பழனியப்பன்!

பொதுக்குழுவில் 90 சதவிகிதத்துக்கும் மேலான பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றதை அடுத்து... ‘தினகரனுக்கு எதிராக எடப்பாடி எக்ஸ்பிரஸ் வேகம் எடுக்கத் தொடங்கிவிட்டது’ என்று நேற்று மாலை டிஜிட்டல் திண்ணை பகுதியில் எழுதியிருந்தோம். அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் அதை உறுதிப்படுத்துவதாகவே இருக்கின்றன.

செப்டம்பர் 11ஆம் தேதி பிற்பகல் கோவை மாநகர போலீஸார் 12 பேர் அடங்கிய டீம் ஒன்று ஊட்டி வழியாக கர்நாடக மாநிலம் குடகு பகுதிக்குப் புறப்பட்டது. ஒரு ஏ.சி, ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள், டிரைவர்கள் ஆகியோருடன் நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டீம் ஒன்றும் அவர்களுடன் இணைந்துகொள்ள... மூன்று டெம்ப்போ டிராவலர்களில் புறப்பட்டது அந்த டீம். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கர்நாடக மாநிலம் குடகு பகுதியிலுள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கியிருக்கும் நிலையில், இந்த டீம் அவர்களைக் குறிவைத்துதான் புறப்பட்டது.

அவர்களுடன் சென்ற நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. டீமின் அஜெண்டா வேறு!

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் சுப்ரமணியம் கடந்த ஜூலை 8ஆம்தேதி செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள அவரது தோட்டத்து வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு முன்பாக எழுதிய 4 பக்கக் கடிதத்தில் முன்னாள் உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் பெயரும் இருக்கிறது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் பழனியப்பனுக்கு இருமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. பழனியப்பன் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது சுப்பிரமணி கல்லூரி காண்ட்ராக்ட் வேலைகளை எடுத்துச் செய்திருக்கிறார் என்கிறார்கள் நாமக்கல் வட்டாரத்தில்.

இப்போது பழனியப்பன் தினகரன் அணியில் இருக்கிறார். எனவே, அவர் மீதான இந்த புகார் பற்றிய விசாரணையை வேகப்படுத்த அரசுத் தரப்பு திட்டமிட்டிருக்கிறது. அதற்காகத்தான் கோவை போலீஸாருடன் நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. டீமும் குடகுமலைப் பகுதிக்கு விரைந்திருக்கிறது.

இதுபற்றி பொதுக்குழுவில் கலந்துகொண்ட கொங்கு மண்டல அதிமுகவினரிடம் பேசினோம்.

“பழனியப்பன் மீது எடப்பாடி மட்டுமல்ல... ஓ.பி.எஸ். அணியில் இருந்து சமீபத்தில் இணைந்த கே.பி.முனுசாமியும் லோக்கல் அரசியல் களத்தில் கோபத்தோடுதான் இருக்கிறார். பழனியப்பன் மீது இந்தப் புகார் இருப்பது போல... தினகரன் அணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மீது வேறு என்னென்ன புகார்கள் இருக்கின்றன என்பது குறித்து அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்களிடம் வாய்மொழியாக தகவல் கேட்கப்பட்டிருக்கிறது. அந்த புகார் விவகாரங்களை தூசு தட்டி சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு எச்சரிக்கை விட, எடப்பாடி தரப்பினர் முடிவு செய்துவிட்டார்கள். அதன் மூலம் அவர்களையும் தங்கள் அணிக்குக் கொண்டுவந்து தினகரனை நிராயுதபாணி ஆக்குவதுதான் எடப்பாடியின் திட்டம்.

பொதுக்குழுவில் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வந்துவிட்ட நிலையில் கட்சியையும் ஆட்சியையும் ஒருசேர தன் கைக்குள் கொண்டுவர எடப்பாடி திட்டமிடுகிறார். கட்சி தன்னிடம் இருப்பது பொதுக்குழு மூலம் கிட்டத்தட்ட உறுதியான நிலையில், ஆட்சிக்கு ஆட்டம் காண்பிக்கும் தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்களிடம் ஏற்கெனவே பலமுறை பேசியாகிவிட்டது. இனிமேல் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை தன் பக்கம் வரவழைப்பதுதான் எளிது என்று கருதுகிறாராம் எடப்பாடி பழனிசாமி. அதன் முதல் கட்டமே பழனியப்பனைக் குறிவைத்து நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீஸாரின் நடவடிக்கை” என்கிறார்கள்.

எடப்பாடி, தினகரன் ஆகிய இரண்டு தரப்புமே இனி எதிர்பாராத ஆச்சர்யங்களை அரங்கேற்றலாம் என்பதே அரசியல் வட்டாரத்தின் எதிர்பார்ப்பு!

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon