மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

மக்களின் செல்வி ‘ஷில்பா’: ரெமோ சிஸ்டருக்குப் போட்டியா?

மக்களின் செல்வி ‘ஷில்பா’: ரெமோ சிஸ்டருக்குப் போட்டியா?

பெண் வேடத்தில் இருக்கும் நடிகர் விஜய் சேதுபதியின் புகைப்படம் சமூக வலைதளைங்களில் வைரலாகப் பரவிவருகிறது. இது விஜய் சேதுபதி நடிக்கவுள்ள புதிய படத்தில் வரவிருக்கும் கதாபாத்திரம்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக முன்பே செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வத் தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குநர் தியாகராஜன். ‘சூப்பர் டீலக்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், நதியா, மிஷ்கின், சமந்தா, காயத்ரி, பகவதி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இசை யுவன்சங்கர் ராஜா. பி.எஸ்.வினோத் மற்றும் நீராவ் ஷா ஒளிப்பதிவு. இயக்குநர் நலன் குமாரசாமி, மிஷ்கின், நீலன் ஷங்கர் ஆகியோர் துணை எழுத்தாளர்களாக பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தை டைலர் சடன் & கினோ ஃபிஸ்ட் நிறுவனங்கள் தயாரிக்க உள்ளன.

பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவரும் விஜய் சேதுபதி, இப்படத்தில் ‘ஷில்பா’ என்ற பெண் வேடமிட்டு நடிக்க உள்ளார். ‘ஷில்பா’ கதாபாத்திரமாகப் பெண் வேடமிட்ட விஜய் சேதுபதியின் புகைப்படமானது விஜய் சேதுபதி மற்றும் தியாகராஜன் குமாரராஜாவின் ட்விட்டர் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான சிறிது நேரத்திலேயே சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள் எனப் பலரின் வரவேற்பைப் பெற்றுள்ளது. ட்விட்டர் பக்கத்தில் படத்தின் தலைப்பான #SuperDeluxe ட்ரெண்ட் ஆக மாறியுள்ளது.

ரஜினி, விஜய், சரத்குமார், சத்யராஜ் என்று பல முன்னணி நடிகர்கள் தங்களுடைய படங்களில் சிறு கதாபாத்திரத்துக்காக பெண் வேடமிட்டு நடித்திருந்தாலும் கமல் நடிப்பில் வெளியான அவ்வை சண்முகி, பிரசாந்த் நடிப்பில் வெளியான ஆணழகன் உள்ளிட்ட சில படங்களில் நாயகர்கள் படம் முழுவதும் பெண் வேடமிட்டு நடித்துப் பெரும் வரவேற்பைப் பெற்றனர். 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘ரெமோ’ திரைப்படத்தில் நர்ஸ் வேடத்தில் நடித்துப் பாராட்டுதல்களைப் பெற்றார். இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் வரும் ‘ஷில்பா’ கதாபாத்திரம் ‘ரெமோ சிஸ்டருக்கு போட்டியா?’ என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டாம். ஆல்ரெடி அதுதான் ட்ரெண்டிங்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon