மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

சிறப்புக் கட்டுரை: 70 வயதில் இந்தியா: ஜனநாயகத்தை அச்சுறுத்தும் ஒரு கட்சி ஆதிக்கம்! -கைலாஷ் குன்னி கிருஷ்ணன்

சிறப்புக் கட்டுரை: 70 வயதில் இந்தியா: ஜனநாயகத்தை அச்சுறுத்தும் ஒரு கட்சி ஆதிக்கம்! -கைலாஷ் குன்னி கிருஷ்ணன்

70 வருடங்களுக்கு முன், ஜவஹர்லால் நேருவின் புகழ்பெற்ற ‘விதியுடன் சந்திப்பு’ எனும் உரை வெளிப்படுத்தியது பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா பெற்ற சுதந்திரத்தை மட்டுமல்ல; ஒன்றுபட்ட, ஜனநாயக, சமத்துவ மற்றும் நவீன இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வையையும் அது வெளிப்படுத்தியது

இந்திய அரசியல் சாசனத்தில் இந்தியாவின் முதல் பிரதமரின் இந்தத் தொலைநோக்குப் பார்வையும் அதைப் போலவே சுதந்திரப் போராட்டத்தில் தங்களை வழிநடத்திய சித்தாந்தங்களும் எழுதப்பட்டிருந்தன. அந்த அரசியல் சாசனத்தின் கொள்கைகளும் அதன் வலுவான நிறுவனக் கட்டமைப்பும் இத்தனை ஆண்டுகளாகப் பல சவால்களை இந்தியா எதிர்கொள்ள உதவின.

இப்போது ஆளும் பாரதிய ஜனதா கட்சி நேருவின் மரபுகளை அழிக்கத் தீர்மானித்திருப்பதுபோல் தோன்றுகிறது. அதன் அரசியல் போட்டியாளர்களை வெற்றிகொள்வதற்கும், தன்னை ஒருங்கிணைத்துக்கொள்வதற்கும், பாஜக தேசிய நிறுவனங்களைச் சூழ்ச்சித் திறத்துடன் கையாளுகிறது.

போட்டியைக் குறைத்து, எதிரிகளைப் பலவீனப்படுத்தி அவர்களை இல்லாமல் ஆக்கும் நோக்கில் இதைச் செய்கிறது.

2014இல், காங்கிரஸ் தலைமையில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-2 (UPA-II) ஆட்சியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட மறுமலர்ச்சியான ஆட்சி மற்றும் “நல்ல நாள்கள் நம் முன்னே (அச்சா தின்)” என்ற கவர்ச்சிகர வாக்கியத்தின் மேல் இருந்த ஈர்ப்பு போன்றவை மூலம் பாஜக ஆட்சிக்கு வந்தது. 2009 முதல் 2014 வரையிலான, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் பொருளாதாரச் சரிவு மற்றும் மந்தமான கொள்கைகளால் மாத்திரமல்லாமல், குடும்ப அரசியல், ஊழல் ஆகியவற்றாலும் அடையாளம் காணப்பட்டது.

இன்று, நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், 2014இல் நிலவிய நம்பிக்கை வேகமாக அழிந்து வருகிறது. ‘ஒன்று என் வழி அல்லது வீதி’ என்ற வகையிலான இந்த ஆட்சிமுறை, அரசியல் எதிரிகளை வெற்றிபெறுவதற்காக, வழக்கத்திலுள்ள நடைமுறைகளை மட்டும் மீறவில்லை. அது ஒரு கடமையை எப்படிச் சரியான முறையில் ஆற்ற வேண்டும் எனப் போதிக்கும் இந்து தத்துவத்தின் தர்மத்தையும் மீறுவதாக உள்ளது. ஒரு கட்சி ஆதிக்கம் செலுத்தும் கலாசாரம்தான் இந்த அரசாங்கத்தில் தென்படுகிறது.

தர்மம் தோற்றது

மாநிலங்களை ஆள்வதில் பாஜக கொண்டிருந்த அனுபவமும் பத்தாண்டுகளுக்கும் மேலாக பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது போன்றவையும் அதற்கு இன்னும் பரந்துப்பட்ட பார்வையை அளித்திருக்கும் என்று சிலர் கருதினர். அது பெற்ற மகத்தான வெற்றி மற்றும் அங்கீகாரத்துக்கான அதன் தேடல் போன்ற காரணங்களால், தனது எதிர்ப்பாளர்களிடம் தாராள மனப்பான்மையைக் காட்டுமென்றும், மேலும் அரசியலமைப்பில் பொதிந்துள்ள தார்மீக மதிப்பீடுகளுக்கு மரியாதை காட்டுமென்றும் கற்பனை செய்யப்பட்டது

2014இல் பாஜகவின் முக்கியத் தேர்தல் பிரசார முழக்கங்களில் ஒன்று கூட்டுறவு கூட்டாட்சி ஆகும். வட மற்றும் மத்திய இந்தியாவில் உள்ள இந்தி பேசும் மாநிலங்களைத் தவிர்த்து, பிற மாநிலங்களின் அரசியலில் மத்திய - மாநில உறவுகள்தான் முக்கிய பிரச்னையாக உள்ளன. 2002 முதல் 2014 வரை மேற்கு இந்தியாவின் குஜராத்தில் முதலமைச்சராக மோடி இருந்தபோது, மத்திய அரசு செயல்படுவதை மிகவும் மோசமாக விமர்சித்து, “நமது நாட்டினுடைய மத்திய அமைப்பின் கட்டுமானம், எண்ணத்திலும், எழுத்திலும் சீர்குலைகிறது” என்று எழுதிய காரணத்தால், இவரது தலைமையிலான ஆட்சியில், தங்களுக்கு ஒரு நல்ல பங்கு கிடைக்கும் என மாநிலங்கள் எதிர்பார்த்தன.

ஆனாலும், ஆட்சிக்கு வந்த பின், கடந்த காலத்தில் காங்கிரஸைப் போலவே அவரது கட்சியும் கூட்டாட்சிக்கு விருப்பமற்ற ஒன்று என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது, காங்கிரஸ் கட்சி, மாநில ஆளுநர்களை, ஆளும்கட்சியின் கைப்பாவையாக பயன்படுத்துகின்றது என்று கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தது. இருப்பினும், ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள், NDA-II அரசாங்கம், எல்லா நயங்களையும் ஜன்னல் வெளியே வீசிவிட்டு, UPA-II அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களை அகற்றி தனக்கு சாதகமான ஆளுநர்களை நியமித்தது.

மாநிலங்களைக் கட்டுப்படுத்துதல்

கடந்த மூன்று ஆண்டுகளில், மத்திய அரசு எந்தத் தயக்கமுமின்றி, அரசியலமைப்பில் அவசரகால விதி 356யைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் ஆளுநரின் அலுவலகத்தின் வழியாக, மையத்தின் நிர்வாகம் மற்றும் நிதி ஆற்றல் மூலம் மாநிலத்தை நேரடியாக மத்திய அரசின் கீழ் கொண்டுவருகிறது. இது அந்தக் கட்சினுடைய பாகுபாட்டுத் தன்மையை வெளிப்படுத்துகிறது.

அருணாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், திரிபுரா, தமிழ்நாடு, நாகலாந்து, புது டெல்லி, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள், ஆளும் பாஜகவுக்கு மத்திய தலையீட்டுக்கான எளிய இலக்காக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடுருவல்கள் கூட்டாட்சி எண்ணத்தின் மீதான அத்துமீறல்களாகும், மேலும், இவை கூட்டுறவு கூட்டாட்சிக்கு நல்ல முன்மாதிரிகளும் அல்ல.

உதாரணமாக, அருணாச்சலப் பிரதேசத்தில் கவர்னர் அரசாங்கத்துடன் ஆலோசனை கொள்ளாமல் மாநில சட்டமன்றத்தில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அதில் பாஜக மற்றும் கலகக்கார காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பங்கு பெற்றனர். உத்தரகாண்டில், சட்டமன்றத்தில் முதலமைச்சர் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முந்தைய நாள், மத்திய அரசு அவசரகால விதி 356யைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைத்தது. இரண்டு சந்தர்ப்பங்களிலும், ஆளும் காங்கிரஸின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அந்தக் கட்சிக்குத் துரோகம் செய்தவர்களை பாஜக ஊக்குவித்தது.

காங்கிரஸ் அல்லது பாஜகவைவிட மாநிலக் கட்சிகள் அதிகம் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், அரசாங்கங்களுக்கு இடையிலான உறவுக்காக இன்டர் ஸ்டேட் கவுன்சில் (ISC) எனும் ஓர் அரசியலமைப்பு மன்றத்தில், கலந்தாய்வுக் கூட்டம் அடிக்கடி நடைபெற்றது. “மத்திய - மாநில உறவுகளைப் பலப்படுத்துவதற்கான மிக முக்கியமான தளம்” என்று முன்பு மோடி, ISC பற்றி பாராட்டி பேசியிருந்த போதிலும், அவரது அரசு, தேசிய அளவிலான முடிவெடுப்பில் மாநில அரசுகளை ஈடுபடுத்துவதற்குரிய ஒரு தளமாக இதைப் பயன்படுத்தவில்லை

நாடாளுமன்றம் பலவீனப்படுத்தப்பட்டது

பலமான இடத்தை அடைவதற்கு பாஜக மேற்கொள்ளும் சூழ்ச்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளை முடக்க நினைக்கும் பாஜகவின் முயற்சிகள் காரணமாக நாடாளுமன்றம் பலவீனப்படுத்தப்படுகிறது. உதாரணமாக, NDA-II ஒரு சர்ச்சைக்குரிய மசோதாவை, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பைத் தவிர்ப்பதற்காக, நம் அரசியல் கட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் வகையில் நிறைவேற்றியது. இது அரசியலமைப்பின் அடிப்படை நோக்கத்துக்கு முரணானது. மேலும், அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான உறவை எதிர்காலத்தில் இது மேலும் சீரழிக்கும்.

முடிவாக, அரசாங்கம் தன் மீதான விமர்சனங்களை அறவே சகித்துக்கொள்வதில்லை. சொல்லப்படும் விமர்சனத்தின் பின் இருக்கும் செய்தியைப் புறக்கணித்துவிட்டு, அந்த விமர்சகரைத் தாக்கும் செயலில் ஈடுபடுகிறது இந்த அரசு. அரசுக் கொள்கைளுக்கு எதிரான கருத்து, ஆளும் கட்சியின் தொண்டர்களை எதிர்க்கும் நிலைப்பாடுகள் போன்றவை நம் தேசத்துக்கான அச்சுறுத்தலாகத் திரித்துக் கூறப்படுகின்றன.

பல்வேறு சந்தர்ப்பங்களில், கட்சியின் செய்தித் தொடர்பாளர்களும், அரசாங்க அமைச்சர்களும், தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில், சுதந்திரமாகப் பேசும் உரிமையைத் தடுக்க முயன்றுள்ளனர்.

உதாரணமாக, ஆயுதப் போராட்டங்களின் மீது, சில பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர் குழுக்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு முரணான ஒரு நிலைப்பாட்டை எடுத்தபோது, அவை தேச விரோதமாகத் திரித்துக் கூறப்பட்டன.

அரசாங்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும், ஊடக அமைப்புக்களையும், அரசாங்கத்தைப் பின்தொடர மறுத்த தனிநபர்களையும் மிகவும் கடுமையான விமர்சனத்துக்கு உட்பட்டுத்துகிறது.

எதிர்ப்பாளர்களைத் தவிர்ப்பது, கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது, மாநிலங்களின் உரிமைகளை மீறுவது, பைரிக் என்ற பழங்காலத்து கிரேக்க மன்னன், பெரும் இழப்புகளுடன் அடைந்த வெற்றியை போன்ற ஒரு வெற்றியைத்தான் பெற உதவும். அரசாங்கத்தில் ஆட்சியாளர்களுக்கு என்று சில கடமைகள் உள்ளன. அந்தக் கடமைக்கான நியதிகளைப் பின்பற்றாமல் மீறுவது என்பதும் ஊழல்தான். அரசியல் சாசனம் என்பது குறிப்பிட்ட நோக்கங்களுக்காகச் சேவை செய்வதற்கென்று நன்கு கலந்து பேசி முடிவு செய்யப்பட்ட கட்டுப்பாடுகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். நடப்பிலுள்ள ஏற்பாடுகளுடன் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்பது இயல்பானதுதான்.

ஓர் அமைப்பின் விதிகளுக்குட்பட்டுக் கடமையாற்ற வேண்டும் என்று தர்மம் அறிவுறுத்துகிறது. நம் அரசியல் சாசனத்தின் சிக்கலான மற்றும் நுட்பமான தன்மைகளைப் புறக்கணிப்பது, நம் கட்டமைப்பின் ஒழுங்கைப் பலவீனப்படுத்தும் வழிமுறைகளைக் கண்டுபிடிப்பது போன்றவை, நம் அரசியலமைப்பின் அடிப்படை உணர்வை மீறும் செயல்களாகும். இந்த உணர்வுதான் ஜனநாயகத்தின் அடித்தளம். இதுதான் 70 ஆண்டு காலச் சுதந்திரத்தைக் கொண்டாடுகிறது.

நன்றி: Theconversation.com

தமிழில்: முகமது ஹுசைன்

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon