மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

ஐஸ்வர்யா ஓப்பன் டாக்!

ஐஸ்வர்யா ஓப்பன் டாக்!

தமிழ்மொழி மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் என இந்திய சினிமாவின் மற்ற மொழிகளிலும் கால்பதித்து வெற்றிகண்டு வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தன் மேம்பட்ட நடிப்பாற்றலால் குறுகிய காலகட்டத்தில் புகழை அடைந்த ஐஸ்வர்யா, தனது சினிமா அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளது தமிழ் சினிமாவில் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

சினிமா அனுபவம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்துள்ள பேட்டியில், “5 வருடத்துக்கு முன்பு நான் சினிமாவில் நுழைய மிகுந்த சிரமப்பட்டேன். வாய்ப்புக்காக என்னை அட்ஜஸ்ட் செய்யச் சொன்னார்கள். இம்மாதிரியான பிரச்னைகளை முன்பு நான் நிறைய சந்தித்தேன். அதைப் பற்றிப் பேசியும் இருக்கிறேன். ஆனால், இப்போது உள்ள சினிமாவில் எல்லோரும் இதைப் பற்றி பேசக்கூட பயப்படுகிறார்கள். அந்த வகையில் சமூக வலைதளங்களுக்கு நான் நன்றி சொல்வேன். ஏனெனில், இம்மாதிரியான மோசமான விஷயங்களை வெளியில் கொண்டுவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்க்கச் செய்கிறது. சிவப்பான நிறம் கொண்ட கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த ரசிகர்கள் என்னைப் போன்ற மாநிறம் உள்ள நடிகைகளையும் ஏற்றிருக்கின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஐஸ்வர்யாவுக்கு முன்பே பல நடிகைகள் சினிமாவில் இருக்கும் ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ குறித்து பேசினாலும் அதற்கான முயற்சிகளை எந்தத் திரையுலகமும் எடுப்பதில்லை. கேரள சினிமா அந்த வகையில் ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது. மஞ்சு வாரியார், பார்வதி, பாவனா போன்ற நடிகைகளின் வெளிப்படையான பேச்சினால், புதுமுக நடிகைகள் அச்சமின்றி தங்களுக்கு இன்னல் ஏற்படும்போது சட்டத்தின் கதவுகளைத் தட்ட தயங்குவதில்லை. ஆனால், மாதத்துக்கு ஐந்து ஹீரோயின்களை அறிமுகப்படுத்தும் கோலிவுட்டின் டாப் ஹீரோயின்கள் இதைப் பற்றியெல்லாம் பேசக்கூட நேரமின்றி படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon