மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

ஓராயிரம் தினகரன் வந்தாலும் அசைக்க முடியாது: முதல்வர்!

ஓராயிரம் தினகரன் வந்தாலும் அசைக்க முடியாது:  முதல்வர்!

‘ஓராயிரம் தினகரன் வந்தாலும் ஆட்சியை அசைக்க முடியாது’ என்று நேற்றைய தினம் நடைபெற்ற பொதுக்குழுவில் முதல்வர் பழனிசாமி சூளுரைத்துள்ளார்.

பொதுக்குழுவுக்குத் தடையில்லை என்று உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த அதிமுகவின் அணிகள் சார்பில் நேற்றைய தினம் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழுவில் முதலில் ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன் பிறகு வரவேற்புரையாற்றிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, “ஆட்சியை வீழ்த்துவோம் என்பவர்களிடம் சுயநலத்தைவிட வேறென்ன இருக்க முடியும். அதிமுகவைக் காப்பாற்ற ஜெயலலிதா எவ்வளவு பாடுபட்டார் என்பது தொண்டர்களுக்குத் தெரியும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இல்லாத நிலையில் இரண்டாவது முறையாக பொதுக்குழுவை நடத்தியுள்ளோம். முதல்வர் பழனிசாமி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி, ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தி வருகிறார்” என்று தெரிவித்தார். தொடர்ந்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இரங்கல் தீர்மானம் வாசித்தார்.

பின்னர் பொதுக்குழு தீர்மானத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாசித்தார். மொத்தம் 42 நிமிடங்கள் வாசிக்கப்பட்ட தீர்மானத்தில், தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது ரத்து செய்யப்படுகிறது என்றும், தினகரன் அறிவிப்புகள் செல்லாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இனி அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது. பொதுச்செயலாளரின் அதிகாரம் அனைத்தும் ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப்படுகிறது என்றும், ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்படுகின்றனர் என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்க இந்த பொதுக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்காமல் நடைபெற்றதன் மூலம் முதல் வெற்றி கிடைத்துள்ளது. கூட்டம் நடைபெறாது என்று சிலர் நினைத்துக் கொண்டிருந்தாலும் தொண்டர்கள் ஆதரவால் இந்தப் பொதுக்குழு நடைபெற்றுள்ளது.

அதிமுகவின் அணிகள் இணைந்ததன் மூலம் நாம் புதிய வரலாறு படைத்துள்ளோம். தமிழகத்தில் பிரிந்த கட்சிகள் ஒன்றிணைந்ததாக வரலாறு இல்லை. ஆனால், அந்த வரலாற்றை அதிமுக உடைத்துள்ளது. திமுகவின் தலைவராகக்கூட ஸ்டாலின் ஆக முடியவில்லை. பிறகெப்படி முதல்வராக முடியும். தமிழகத்தில் ஆண்ட கட்சியே மீண்டும் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்துக்குள் வந்தது அதிமுக மட்டுமே. இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சிக்கு வந்துள்ளது. இனிமேல் யார் நினைத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது.

கட்சியில் உறுப்பினராக இல்லாத தினகரன் மற்றவர்களை எப்படி நீக்க முடியும்? கடந்த 10 ஆண்டுகளாக தினகரன் எங்கே இருந்தார்? துரோகம் இழைத்ததற்காக ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கபட்ட தினகரன் எங்களைப் பார்த்து துரோகிகள் என்பதா? இனி ஓராயிரம் தினகரன் வந்தாலும் யார் நினைத்தாலும் நம்மை அழிக்க முடியாது” என்று தெரிவித்தார்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon