மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

உணவுத் தரம் குறித்து புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்!

உணவுத் தரம் குறித்து புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்!

ராமநாதபுரத்தில் உணவுப் பொருள்களின் தரம் குறித்து புகார்களைத் தெரிவிக்க அம்மாவட்ட ஆட்சியர் நடராஜன் புதிய வாட்ஸ்அப் எண் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ராமநாதபுரத்தில் உணவு தரம் மற்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அவ்வப்போது விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில் பாலின் தரம் குறித்த பரிசோதனை விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன. ஒரு வாரம் வரை நடைபெற்ற இந்த முகாமில் கணினிமய தானியங்கி கருவி மூலம் பாலின் தரம் சோதிக்கப்பட்டு, உடனுக்குடன் மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

லாப நோக்கில் மட்டுமே செயல்படும் விற்பனையாளர்கள் பால், பழங்கள், உணவு என அனைத்திலும் கலப்படம் செய்து வருகின்றனர். இதனால், மனிதர்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவு குறித்து சிந்திப்பதில்லை. அதனால், உணவுப் பொருள்களில் கலப்படங்களைத் தடுக்கும் வகையில், அதுகுறித்து புகார் அளிக்க 94440 42322 என்ற ‘வாட்ஸ்அப்’ எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில், கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம், தரமில்லாத குடிநீர் கேன்கள், பால், பால் பொருள்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் உணவுப் பொருள்கள் தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் தெரிவிக்கலாம். புகார்களுக்கான நடவடிக்கைகள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon